பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

61

மாப்பிள்ளைத் தேவர் தஞ்சைப்படைகளை முன் நடத்தி வர இராமநாதபுரம் கோட்டையை முற்றுகையிட்டனர். மன்னர் துல்ஜாஜியும் இந்தப் போரில் நேரிடையாகக் கலந்து கொண்டார். இரு தரப்பினருக்கும் வெற்றி தோல்வி ஏற்படா நிலையில், இந்தப் போர் 30 நாட்கள் நீடித்தன. இதனை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஒரு திட்டத்தை இராமநாதபுரம் தரப்பில் வரைந்தனர். திட்டமும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. அதாவது இராமநாதபுரத்திற்கு மேற்கே உள்ள பெரிய கண்மாய் நீர்த்தேக்கத்தில் நிறைவாக இருந்த நீரைக் கண்மாய்க்கரையைச் சிறிது அகழ்வதின் மூலமாக ஒரு பெரிய உடைப்பை ஏற்படுத்தவும் அதன் வழி மிகுந்த வேகத்துடன் பாய்ந்து சென்ற கண்மாய் நீரை கிழக்கே ஓடிவந்து இராமநாதபுரம் கோட்டையை வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும் சூழ்ந்திருந்த தஞ்சைப் படைகளை முழுமையாக அழித்தது. வேறு வழியில்லாமல் தஞ்சை அரசர் சேதுபதி ராணியுடன் ஓர் உடன்பாடு செய்துகொண்டு ஓரளவு நஷ்டஈட்டையும் பெற்றுக்கொண்டு தஞ்சை திரும்பினார். இது நடந்தது ஜூன் 1771.

ஆற்காடு நவாப்பின் படையெடுப்பு

இந்த நிகழ்ச்சிக்கு ஒராண்டு கழித்து ஆற்காடு நவாபின் படைகளும், ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக் கூலிப்படைகளும், நவாபின் மைந்தர் உம் தத்துல் உம்ராவும், தளபதி ஜோசப் ஸ்மித்தும் இந்தப் படையெடுப் பிற்கு கூட்டுத்தலைமை ஏற்றனர். திருச்சியிலிருந்து திரட்டி வந்த பெரும்படை 29.05.1772-ஆம் நாள் இராமநாதபுரம் கோட்டையைச் சூழ்ந்தது.[1] தொடர்ந்து மூன்று நாள்கள் ராணி சேதுபதியுடன் பேச்சு வார்த்தை நடத்தியும் ஆற்காடு நவாபிற்குக் கப்பம் கட்ட ராணி மறுத்துவிட்டார். இதனால் சீற்றம் கொண்ட நவாபின் மைந்தர் உம்தத்துல் உம்ரா ஏற்கனவே கோட்டையைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டிருந்த பீரங்கி வண்டி வீரர்களுக்கு சமிங்ஞை செய்ததும் இராமநாதபுரம் கோட்டை மீது பீரங்கிகள் அக்கினி மழையைப் பொழிந்தன. தொடர்ந்து இரண்டு நாள்கள் போர் நடைபெற்றும் வெற்றி ஈட்டாத எதிர்ப்படைகள் கோட்டையின் கிழக்கு மதிலில் ஏற்பட்ட ஒரு பெரிய வெடிப்பின் வழியாகத் தளபதி ஸ்டிவன்சன் தலைமையில் ஒரு அணி பாய்ந்து சென்றது. இராமநாதபுரம் கோட்டை வாயிலுக்கும் அரண்மனைக்கும் இடைப்பட்ட பரந்த மைதானத்தில் பரங்கியரும், மறவர்களும் கடுமையாகப் போரிட்டனர். முடிவில் 3000 மறவர்களை இழந்த இராமநாதபுரம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணிந்தது. இது நிகழ்ந்தது 03.06.1772. கைது செய்யப்பட்ட ராணி சேதுபதியும் இரண்டு பெண்மக்களும் இளவரசர் முத்துராமலிங்க


  1. (மில்டரி கண்சல்ஸ்டேசன்) military Consulstation