பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

சேதுபதி மன்னர் வரலாறு

விரோதப்போக்கும் நீடித்து வந்தன. முடிவில் ஆனந்துரை அடுத்த பகுதியில் இரு சீமைப்படைகளும் நேருக்கு நேர் மோதின.[1] இதனையறிந்த கும்பெனிக் கலெக்டரும் நவாபும் இருதரப்பினருக்கும் அறிவுரைகள் வழங்கிப் போர் நடவடிக்கையை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். நியாய உணர்வினால் உந்தப்பட்ட சேதுபதி மன்னர் போர் நிறுத்தத்திற்கு உடன்படாமல் போரை நீடித்து வந்தார்.

இருவருக்கும் சமரசம் செய்வதற்காக கலெக்டர் பவுனி இருதரப்பினரையும் தொண்டிக்கு அருகில் உள்ள முத்துராமலிங்க பட்டினத்துச் சத்திரத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார். சிவகங்கைப் பிரதானிகள் ஏற்றுக் கொண்டனர். சேதுபதி மன்னர் சம்மனைப் புறக்கணித்து விசாரணைக்குச் செல்லவில்லை. இதனால் கும்பெனியாருக்கு மன்னர் மீது கோபம் ஏற்பட்டது.

இதற்கிடையில் கி.பி. 1792-ல் சேதுநாடு எங்கும் கடும் வறட்சி ஏற்பட்டது. இச்சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு கும்பெனியார் சேதுநாட்டில் தானியங்களை விற்பனை செய்வதற்கு முன் வந்தனர். விற்பனையாகும் தானியங்களுக்குச் சுங்க விலக்கு அளிக்குமாறும் கேட்டுக்கொண்டனர். இந்தக் கோரிக்கையையும் சேது மன்னர் புறக்கணித்து விட்டார். இச்சூழலில் கும்பெனியாரைச் சார்ந்து நடந்து கொள்ளுமாறு பிரதானி முத்திருளப்ப பிள்ளை, அடிக்கடி மன்னரை வற்புறுத்தி வந்தார். இதற்கு உடன்படா மன்னர் பிரதானியைப் பதவி நீக்கம் செய்தார். அடுத்து இராமநாதபுரம் சீமையில் உற்பத்தியாகும் கைத்தறித் துணிகள் அனைத்தையும் ஏகபோகமாக கும்பெனியாரே வாங்குதற்கும், கொள்முதல் செய்வதற்கும் மன்னரது அனுமதியைக் கோரினர். அப்போது செயல்பட்ட 650 தறிகளில் 150 தறிகளுக்கு மேலாக மன்னரது நேரடிப்பொறுப்பில் இயங்கி வந்ததாலும், இதனால் சேதுநாட்டிற்கு வருமான இழப்பு ஏற்படும் நிலை இருந்ததாலும் மன்னர் இந்தக் கோரிக்கையையும் மறுத்தளித்து விட்டார். கடைசியாக கும்பெனியார் மதுரை நெல்லைச் சீமைகளில் கொள்முதல் செய்த கைத்தறித் துணிச் சிப்பங்களை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கப்பலில் பாம்பன் கால்வாய் வழியாகச் சென்னைக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். பாம்பன் துறைமுகத்தில் கும்பெனியார் அவர்களது கப்பல்களுக்கு முன்னுரிமையும் சுங்கச் சலுகையும் பெற முயன்றனர். இந்த முயற்சியையும், மன்னர் நிராகரித்து, வரிசை முறையை அமுல்படுத்தியதால் முன்னுரிமை வழங்க மறுத்தார்.

இவ்விதம் அப்பொழுது தமிழகத்தின் அரசியலில் வாய்ப்பும் வலிமையும் பெற்று வந்த கும்பெனியாரை அவமதிப்புக்குள்ளாக்கிய


  1. Military Consultation Vol. No: