பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

சேதுபதி மன்னர் வரலாறு

பராம்பரிய வீர உணர்வுகளுக்கும் பேர் போன ஊர். கி.பி. 1772-ல் இராமநாதபுரம் கோட்டையைப் பிடித்த ஆற்காடு நவாபும் கும்பெனியாரும் சேதுநாட்டை 9 ஆண்டுகள் நிர்வாகம் செய்தபோது நிர்வாகத்திற்குப் பலவிதமான இடைஞ்சல்களை ஏற்படுத்தி அந்தப் பகுதிக்குள் அந்நியர் நுழையாதபடி செய்தனர் அந்த ஊர் மக்கள். அத்தகைய ஊரில், பிறந்தவர்தான் தளபதி மயிலப்பன் சேர்வைக்காரர். சேர்வைக்காரர் என்றால் அரச சேவையில் உள்ள தளபதி என்ற பொருளாகும். இவரது இயற்பெயரும் மயிலப்பன் என்பதல்ல. இவருக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னால் அந்தப் பகுதியில் பேரும் புகழும் படைத்து வாழ்ந்த மயிலப்பன் என்ற பெருமகன் பெயராலேயே இந்தப் பெயர் இவருக்கு வழங்கப்பட்டு வந்தது.

மயிலப்பனது முயற்சிகள் பலனளிக்காததால் திருச்சியிலிருந்து சேதுநாடு திரும்பியபின் முதுகளத்துரா பகுதி மக்களைத் திரட்டி ஆங்கிலேயருக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார். இவரது திட்டத்தைப் பின்பற்றிய மறக்குடி மக்கள் கி.பி. 1796இல் முன்பு சேதுபதி மன்னருக்கு வழங்கிய வரி இறைகளை ஆங்கிலக் கும்பெனியாருக்குக் கொடுக்க மறுத்தனர். அடுத்தபடியாக 1797ல் கும்பெனியார், குடிமக்களது நிலங்களைப் புதிய முறையில் நில அளவை செய்யும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க மறுத்தனர். இத்தகைய கிளர்ச்சிப் போக்குகளை இராமநாதபுரம் சீமை கலெக்டரான காலின்ஸ் ஜாக்சன் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினார். இதனால் சிறிது காலம் சோர்வுற்றிருந்த குடிமக்கள் மீண்டும் மயிலப்பன் சேர்வைக்காரரது போதனைகளினால் கும்பெனியாருக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தனர்.

சித்திரங்குடி சேர்வைக்காரரின் புரட்சி

1799-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி வைகறைப் பொழுதில் மயிலப்பன் சேர்வைக்காரர் தலைமையிலான புரட்சிக்காரர்கள் முதுகளத்தூரிலுள்ள கும்பெனியார் கச்சேரியைத் தாக்கி, அங்கு காவலில் இருந்த கும்பெனிப் பணியாளர்களை விரட்டியடித்து விட்டு அவர்களது ஆயுதங்களை எடுத்தும் சென்றனர். அடுத்து அபிராமத்திற்குச் சென்று அங்குள்ள கச்சேரியையும் கைத்தறிக் கிட்டங்கியையும் தாக்கித் துணிகளைச் சூறை போட்டனர். இந்த நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக அவர்கள் கமுதிக்கும் சென்று கச்சேரியைத் தாக்கியதுடன் பெரிய நெற்களஞ்சியங்களையும் கொள்ளையிட்டனர்.

இந்தக் கிளர்ச்சியினால் முதுகளத்தூர், கமுதி சீமை மக்கள் ஒரு புதிய தெம்புடன் கிளர்ந்து எழுந்ததுடன் கும்பெனியாரைத் துரத்தி விட்டு