பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

சேதுபதி மன்னர் வரலாறு

நீர்வரத்துக்கால்களையும் அமைத்து உதவிய செய்திகள் பல உள்ளன. கூத்தன் சேதுபதி காலத்தில் வைகையாற்றின் நீரினை வறட்சி மிக்க பரமக்குடி, முதுகளத்தூர் பகுதிக்குக் கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்ட வாய்க்கால் ஒன்று இன்றும் கூத்தன்கால் என்ற பெயருடன், பயன்பட்டு வருகின்றது. குண்டாற்று நீரினைக் கமுதிக்கு அருகிலிருந்து திசை திருப்பி முதுகளத்தூர் பகுதியின் கன்னி நிலங்களைக் கழனிகளாக மாற்றுவதற்கு முத்து விஜயரகுநாத சேதுபதி மன்னர் உதவியதையும், சுமார் 30 கல் நீளமான அந்தக் கால்வாய் இன்றும், ரெகுநாத காவேரி என்ற பெயரில் பயன்பட்டு வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கவை.

இவ்விதம், ‘குடி உயர கோல் உயரும்’ என்ற முதுமொழிக்கு ஒப்ப குடிகளும் சேது மன்னரும் வளமையான காலத்தில் வாழ்ந்து வந்ததால் உள்நாட்டு வணிகம் தழைத்தது.

இவ்விதம் சேது மன்னர்களது அக்கரையினால் சேதுநாட்டின் வேளாண்மைத் தொழில் சிறந்து இருந்தது என்பதை அறிய முடிகிறது. இராமநாதபுரம் சமஸ்தான மெனியூவலின்படி வறட்சியும், பற்றாக்குறையும், சேது நாட்டுக் குடிமக்களை வாட்டி வந்த அந்தக் காலத்தில் அவர்கள் மிகச் சிறப்பாக வேளாண் தொழிலில் ஈடுபட்டு இருந்தனர் என்பதை அறிய வியப்பாக உள்ளது. ஏனெனில் சாதாரணமாக விளையக்கூடிய நெல் ரகங்களான உய்யக் கொண்டான், உருண்டைக் கார், போன்ற வகைகளுடன் மிகச்சிறந்த சம்பா நெல் ரகங்களும், சேதுபதி சீமையில் உற்பத்தி செய்யப்பட்டன என்பதைக் கீழே கண்ட பட்டியலின் மூலம் அறிந்து கொள்ளலாம்.[1]

சேதுபதி சீமையில் விளைந்த நெல் ரகங்கள்
  1. . சம்பா
  1. . சரபுலி சம்பா
  1. . ஈர்க்கி சம்பா
  1. . கெருடம் சம்பா
  1. . சிறுமணியன்
  1. . வரகுசம்பா
  1. Raja Ram Rao.T - Manual of Ramnad Samasthanam (1891) Page 48