பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இயல் - VIII
I சேதுபதி மன்னரது நடைமுறைகள்

பொதுவாகச் சேதுபதி மன்னர்கள் இராமநாதபுரம் அரண்மனையில் தங்கியிருக்கும் போது நாள்தோறும் காலையிலிருந்து மாலை வரை பல அலுவல்களில் ஈடுபட்டு வந்தனர். வைகறையில் எழுந்த பிறகு சில மங்கலப் பொருட்களைக் காண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அடுத்து ராஜேஸ்வரி அம்மன் கோயிலில் வழிபாட்டை முடித்துக் கொண்ட பிறகு சிறிது நேரம் நாதஸ்வர இசையை ரசிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். பின்னர் அரண்மனை தென்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விளையாட்டு மேடையில் முளகு செட்டிகள் என்று அழைக்கப்பட்ட மல்லர்களின் மற்போரினைக் கண்டு களிப்பது உண்டு. சில மன்னர்கள் அங்கு குழுமியிருந்த சிறந்த வீரர்களுடன் வாள் பயிற்சியும் செய்து வந்தனர். மாளிகை திரும்பிய பின்னர் காலைக் கடன்களை முடித்து விட்டுச் சிறிது நேரம் அமர்ந்து வீணை போன்ற வாத்திய இசைகளைக் கேட்டு மகிழ்வதும் உண்டு. மன்னர் முத்து இராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி வயலின் இசையைக் கேட்பதற்காக மேல்நாட்டு கலைஞர் ஒருவரைப் பணியில் அமர்த்தி இருந்தார் என்று குறிப்பு ஒன்றில் காணப்படுகிறது. இந்த மன்னருக்கு அழகு மிக்க பொருள்களில் ஈடுபாடு இருந்ததால் மரத்தினால் பல பொருட்களைச் செய்வதற்கு மேல்நாட்டுத் தச்சர் ஒருவரைப் பணியில் அமர்த்தி இருந்தார் என்ற செய்தியும் கிடைத்துள்ளது.

இதனைப் போன்றே மன்னர் பாஸ்கர சேதுபதி காலத்தில் பராமரிக்கப்பட்டு வந்த அரண்மனை மிருகக் காட்சி சாலையைக் கண்காணிப்பதற்கும், மிருகங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கும் ஒரு போர்த்துகீசியப் பரங்கியைக் காப்பாளராக நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இராமலிங்க விலாசம் அரண்மனையில் அமர்ந்து பிரதானி தளகர்த்தருடன் நாட்டு அரசியல் நிலை பற்றிக் கலந்து ஆலோசிப்பதை முறையாகக் கொண்டிருந்தனர். இந்தக் கலந்துரையாடல்களில் எட்டப்படும் கருத்துக்களை வரைவதற்காக ஆங்கில எழுத்தர் ஒருவரும் பாரசீக முன்சி ஒருவரும் நியமனம் பெற்றிருந்தனர் என்ற செய்தி முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி மன்னரது ஆவணம்