பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

83

கி.பி. 1803 முதல் 1812 வரை சேது நாட்டின் முதல் ஜமீன் தாரிணியாக பொறுப்பேற்றிருந்த இராணி மங்களேஸ்வரி நாச்சியாருக்கு ஆண் வாரிசு இல்லாததால் அண்ணாசாமி என்ற சிறுவனைச் சுவிகாரம் செய்துகொண்டார் என மேனுவல் குறிப்பிடுகிறது. இந்த இராணியார் சேசம்மாள் என்ற பெண்ணைச் சுவீகரித்திருந்தும் அவரது புண்ணியமாக திருப்புல்லாணி, அகத்தியர் கூட்டம், சீனிவாசப் பெருமான் ஆலயத்திற்கு நெடிய மாணிக்கம் என்ற கிராமத்தைச் சர்வமான்யமாக வழங்கிய செப்பேட்டின் வழி அறிய முடிகிறது.

இன்னொரு செய்தி இராமநாதபுரம் ஜமீன்தார் இராமசாமித்தேவர் கி.பி. 1730-ல் மரணமடைந்தார். அவரை அடுத்து ஜமீன் பொறுப்பு ஏற்றிருந்த இராணி முத்து வீராயி நாச்சியார் சிவசாமி சேதுபதி என்ற இளைஞரைச் சுவீகாரம் செய்துகொண்டு அவரை இராமநாத புரம் ஜமீன்தாராக அறிவித்தார். இந்த சேதுபதி மன்னர் மீது அட்டாவ தானம் சரவணப் பெருமாள் கவிராயர் ‘சேதுபதி விறலிவிடு துது’ என்ற சிற்றிலக்கியத்தைப் பாடியுள்ளார். இந்தச் செய்திகளைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இராமநாதபுரம் மேனுவலில் காணப்பட வில்லை.

சேதுபதி மன்னர்கள் ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகளை மணந்து இருந்தனர். இதனை வலியுறுத்தும் வகையில் கூத்தன் சேதுபதியின் மகனான தம்பித் தேவருக்குச் சேதுபதி பட்டம் கிடைக்காததால் அவர் சேதுநாட்டில் குழப்பம் விளைவித்தார். அவர் மதுரை திருமலை நாயக்க மன்னரை இந்த விவகாரத்தில் தலையீடு செய்யுமாறு நிர்பந்தித்ததுடன் சேதுநாட்டை கி.பி. 1642-ல் மூன்று பகுதிகளாகப் பிரித்து மூன்று மன்னர்கள் (தம்பித்தேவர் உட்பட) ஆளும்படி செய்தார். ஆதலால் சேது மன்னர்கள் எந்த நாட்டுத் தலைவரது பெண்மக்களை மணந்து இருந்தனர் என்பதும், அவர்களது பெயர்கள் என்ன என்பதும் இந்த ஆவணங்களில் குறிக்கப்படவில்லை.

இத்தகைய சேது மன்னர்களது வரலாற்று நிகழ்ச்சிகளை விவரிப்பதற்கு இந்த ஆவணங்கள் தவறி விட்டதால் இந்த மன்னர்களது நெடிய வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்வதற்கு இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.