பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

87

IV இராமலிங்க விலாசம் அரண்மனை

இன்னல்களும் இடர்ப்பாடுகளும் சேதுபதிக் குடும்பத்தினருக்கும் பொது மக்களுக்கும் அந்நியரது ஆக்கிரமிப்பினால் ஏற்பட்ட பொழுதும் சேது நாட்டின் பழம்பெருமையையும் தன்னரசு நிலைமையினையும் காலமெல்லாம் நினைவூட்டும் எச்சமாக விளங்குவது இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை ஒன்றுதான்.

இந்த மாளிகை இராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் வடகிழக்குப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. போகலூரைத் தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்த சடைக்கன் உடையான் சேதுபதி, கூத்தன் சேதுபதி, தளவாய் சேதுபதி என்ற இரண்டாவது சடைக்கன் சேதுபதி, ரெகுநாத திருமலை சேதுபதி, ரெகுநாத கிழவன் சேதுபதி ஆகியோர்கள் ஆட்சியில் மன்னரது பயன்பாட்டிற்கெனத் தனியாக அத்தாணி மண்டபம் எதுவும் போகலூரில் அமைக்கப்படவில்லை.

ரெகுநாத கிழவன் சேதுபதி மன்னருக்கும், கீழக்கரை வணிக வேந்தரான வள்ளல் சீதக்காதி என்ற செய்கு அப்துல்காதிர் மரைக்காயருக்கும் நெருங்கிய நட்பும் தொடர்பும் ஏற்பட்ட பொழுது சேதுபதி மன்னருக்கு எனத் தனியாக அத்தாணி மண்டபம் ஏற்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை மன்னருக்கு எடுத்துரைத்தார்.

இதன் காரணமாக நிலப்பரப்பிலும் வணிகத் தொடர்புகளிலும் விரிவும் பெருக்கமும் அடைந்த சேதுநாட்டின் தலைமையிடத்திற்குப் போகலூர் கிராமம் பொருத்தமாக இல்லை என்பதை மன்னர் உணர்ந்தார். சேது மன்னர்களது தலைமையிடமாக இராமநாதபுரம் மண்கோட்டை மாற்றம் பெற்றது. வள்ளல் சீதக்காதியின் அறிவுரைப்படி இராமநாதபுரம் மண் கோட்டையின் மண் சுவர்கள் அகற்றப்பட்டு செவ்வக வடிவிலான கல் சுவரினால் ஆன புதிய கோட்டை தோற்றம் பெற்றது. இதன் நடுநாயகமாக அத்தாணி மண்டபம் ஒன்றும் மன்னரது பயன்பாட்டிற்காக நிர்மாணிக்கப்பட்டது.

கிழக்கு மேற்காக 153 அடி நீளமும் 65 அகலமும் செவ்வக வடிவில் 12 அடி உயரமான மேடையில் சுமார் 14 அடி உயர மண்டபமாக இந்த அரண்மனை அமைந்துள்ளது. பெரும்பாலும் கி.பி. 1790 - 1793-க்கு இடைப்பட்ட காலத்தில் இந்த மாளிகை அமைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த மாளிகை ஏறத்தாழ ஒரு கோயிலின் அமைப்பிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறை, அர்த்த[1]


  1. Raja Ram Rao. T - Manual of Ramnad Samasthanam (1891) Page - 232.