பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

91

உடன்பிறவாத சகோதரரும், மன்னரது பிரதிநிதியுமான வள்ளல் சீதக்காதி மரைக்காயரால் கி.பி. 1790-94-க்கும் இடையில் புதிதாக அமைக்கப்பட்ட இராமநாதபுரம் கற்கோட்டையின் தென்மேற்குப் பகுதி இது. அப்பொழுது இராமநாதபுரம் கற்கோட்டை செவ்வக வடிவில் கிழக்கு மேற்காக இரண்டு கல் சுற்றளவில் கிழக்கே ஒரே ஒரு கோட்டை வாசலுடன் அமைக்கப்பட்டது. இந்தக் கோட்டையின் சுவர்கள் 27 அடி உயரமும், ஐந்து அடி அகலமுமாக கொண்டு நிர்மாணிக்கப்பட்டன. இந்தக் கோட்டைச் சுவரின் மூன்று பக்கங்களிலும் 42 கொத்தளங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. எதிரிகள் கோட்டையினைத் தாக்கும் பொழுது கோட்டையின் பிற பகுதிகளிலிருந்தும் கோட்டைச் சுவற்றின் மேலிருந்து எதிரிகளைத் தாக்குவதற்காக கோட்டையின் உட்பகுதியில் கோட்டைச் சுவர் அருகே ஆங்காங்கு இத்தனைக் கொத்தளங்கள் அமைக்கப்பட்டன. இவைகளில் வேல், வில் , வாள், வளரி, ஈட்டி ஆகிய ஆயுதங்களுடன் பெரிய பெரிய அடுப்புக்களும் அமைக்கப்பட்டு அதில் ஈயத்தைக் காய்ச்சி எதிரிகள் மீது ஊற்றும் வழக்கமும் இருந்தது. இந்தக் கோட்டை அமைக்கப்பட்ட காலத்தில் வெடி மருந்தினைக் கொண்டு எதிரிகள் மீது தாக்குவதற்காக பீரங்கிகளும் ஆங்காங்கு கோட்டைச் சுவர் மீது நிறுத்தப்பட்டிருந்தன.

கி.பி. 1770-ஆம் ஆண்டு ஆங்கிலேயரது ஆவணம் ஒன்றில் இராமநாதபுரம் கோட்டை மதிலின் நான்குபுறமும் 44 பீரங்கிகள் நிறுத்தப்பட்டிருந்தன என்ற குறிப்புக் காணப்படுகின்றது.

மேலே கண்ட மூலக்கொத்தளத்திலும் இத்தகைய பீரங்கிகள் 9 நிறுத்தப்படுவதற்காக கட்டப்பட்ட அமைப்பு இன்றும் சிதையாமல் அப்படியே உள்ளது. இராமநாதபுரம் கோட்டை சந்தித்த மிகப்பெரும் போர்களான இராணி மங்கம்மாள் படைகளுக்கும். சேது மன்னர் படைகளுக்கும் நடைபெற்ற போர் (கி.பி. 1702). தஞ்சை மராத்திய படைகளுக்கும் சேது மன்னர் படைகளுக்கும் ஏற்பட்ட போர் (கி.பி. 1709). தஞ்சை மராத்திய மன்னர் துல்ஜாஜி கி.பி. 1771 ஏப்ரல். மே மாதங்களில் மேற்கொண்ட இராமநாதபுரம் கோட்டை முற்றுகைப்போர். ஆற்காடு நவாப் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியார் கூட்டுப் பொறுப்பில் இராமநாதபுரம் கோட்டையைத் தாக்கிய போர் (கி.பி. 1772) இந்த நான்கு போர்களிலும் மூலைக்கொத்தளம் அமைப்பு எவ்விதமும் பாதிக்கப்படவில்லை.

ஆனால் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியர் கி.பி. 1795-ல் சேதுபதி மன்னரைக் கைது செய்து, சேது நாட்டைத் தங்களது உடமையாக மாற்றிய பிறகும், சேது நாட்டிலும், சிவகங்கை, திருநெல்வேலிச்