பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

எழுதியுள்ள நூல்களும், திருவாங்கூர், கொச்சி, குடகு, தென்கன்னடம் ஆகிய பகுதிகளைப் பற்றிய அரசியல் வெளியீடுகளும் பெருந்துணை செய்தன. பழையங்காடி, உடுப்பி, ஹொன்னாவர், கோழிக்கோடு, கண்ணனூர், பெல்காம் முதலிய பேரூர்களில் வாழ்ந்துவரும் நண்பர்கள் பலர் தெரிவித்த குறிப்புகளும் எனக்கு மிக்க ஊக்கம் தந்தன. அதனால் சேரர் வரலாற்றைக் காண்பதற் கெழுந்த வேட்கை உறுதிப்படுவதாயிற்று. சேரநாடு கேரள நாடாயின் பின், சேர மக்கள் வாழ்ந்த ஊர்களும், அவர்களிடையே நிலவிய ஒழுக்க நெறிகளும் மறைந்து ஒடுங்கினவாயினும், பழங்கால இலக்கியக் கண் கொண்டு நேரில் சென்று காண்போர்க்குப் புலனாகாமற் போகவில்லை.

அவற்றை அவ்வப்போது நேரில் சென்று கண்டும், ஆங்காங்குள்ள அறிஞர்களோடு அளவளாவியும் ஆராய்ந்த போது, அவற்றின் துணை கொண்டு பண்டை நாளைச் சேரமன்னர் வரலாற்றைக் கோவைப்படவைத்துக் காண்டற்கு வாய்ப்பு உண்டாயிற்று. இந்த என் முயற்சிக்குத் துணைபுரிந்தவர், கோவையில் ஓய்வு பெற்றிருக்கும் வேளாண்மைக் கல்லூரிப் பேராசிரியர் திரு. வேங்கட கிருஷ்ணப் பிள்ளையவர்களும், 1940-41ல் வடவார்க்காடு மாவட்டத்தில் கல்வியதிகாரியாக இருந்த திரு. வீ. கே. இராமன் மேனன் அவர்களுமாவர். தொடக்கத்தில் என்னை இவ்வாராய்ச்சியில் ஈடு படுமாறு தூண்டிச் சேர நாட்டு வரலாற்றாசிரியர் சிலருடைய நட்பையும் உண்டுபண்ணுவித்து ஊக்கியவர் என் கெழுதகை நண்பர், அண்ணாமலைப்