பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 107



எனப்பட்டனர்; இக் குறிப்புத் தோன்றவே ஐம்பெருங் குழு என்னும் அரசியலாராய்ச்சிக் குழு தமிழ் வேந்தர் அரசியலில் இடம் பெறுவதாயிற்று. சேரரினும் பாண்டிர் பழையராதலின், அவரால் உளதாகிய ஐம்பெருங் குழு முன்வைத்தும், எண்பேராயம் பின் வைத்தும் சான்றோ ராற் குறிக்கப்படுகின்றன. சேரநாட்டு எண்பகுதிகளும் குட்டநாடு, பொறைநாடு, குகட நாடு, கொண்கான நாடு, வான நாடு, பாயல் நாடு, கடுங்கோநாடு[1], பூழி நாடு என்பன. பாண்டிய நாட்டு ஐம் பகுதிகளும், மதுரை, மோகூர், கொற்கை, திருநெல்வேலி (பழையன் கோட்டை[2]), கருவை என்ற ஊர்களைத் தலைமையாகக் கொண்டவை.

இவற்றை எல்லாம் கருத்தூன்றி நோக்கிய நெடுஞ் சேரலாதனுக்கு, இமயம் சென்று அதனை எல்லை யாக்கிக் கோடற்கு எழுந்த வண்ணம் பேரூக்கத்தால் உந்தப் படுவதாயிற்று. எண்பேராயத்தை ஒருங்கு கூட்டித் தன் எண்ணத்தைத் தெரிவித்தான். எல்லோரும் அவன் கருத்தைப் பாராட்டினர்; ஏனைச் சோழ பாண்டி யர்க்குத் திருமுகம் போக்கி அவர் கருத்தை அறிய முயன்றான். அந் நாளில் சோழ பாண்டியர்கள், தமிழர் என்ற இனவொருமையால் கருத்தொருமித்து இமயத்தைத் தமிழ்க்கு வரம்பாகச் செய்யும் சேரமான் முயற்சியை வாழ்த்தித் தங்கள் நாட்டினின்றும் இரு


  1. சங்ககாலத்துக்கு முன்னர் வான நாடு கொண்கானத்திலும், பின்னர்க் கடுங்கோ நாடு, வள்ளுவ நாடு கொங்கு நாடுகளிலும் சேர்ந்து விட்டன.
  2. இப் பழையன்கோட்டை நாளடைவில் பளையன் கோட்டையாகிப் பாளையங்கோட்டை என மருவிற்று.