பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112 சேர மன்னர் வரலாறு



இவர்கள், தொடக்கத்தில் கொண்கானத்திலும், வானவாசியிலும், குடகு நாட்டிலும், கருநாடகப் பகுதியிலும், இறுதியில் ஆந்திர நாட்டிலும் அரசு புரிந்திருக்கின்றனர் அன்றோ? இவர்களது வரலாறு கண்டோர், இவர்களைக் கோவாக் கடம்பர், வான வாசிக் கடம்பர் பாயல் நாட்டுக் கடம்பர், கலிங்கக் கடம்பர் எனப் பலவகையாகப் பிரித்துக் கொண்டு கூறுகின்றனர். குடகுநாட்டு வேந்தரைப் பாயல் நாட்டுக் கடம்பர் என்பர்; அக் குடகு நாட்டுக்குப் பண்டைப் பெயர் பாயல் நாடு என்பதாகும். ஏழில்மலைக்கும் கோகரணத்துக்கும் இடையில், மேலைக் கடற்கரைப் பகுதியாக இருக்கும் கொண்கானத்தின் வட பகுதியைப் பங்களநாடு என்பராகலின், அங்கு வாழ்ந்த பங்கள் வேந்தர் பங்களக் கடம்பர் எனப்பட்டனர்[1]. இக் கடம்பர்கள் மிக்க சிறப்புடன் வாழ்ந்த காலம் கி.பி. பதினொன்று பன்னிரண்டாம் நூற்றாண்டுகள்; இவர்களது ஆட்சியும் இடைக்காலச் சோழவேந்தர் ஆட்சிபோல மிக்க சிறப்பாகவே இருந்திருக்கிறது.[2]

இக் கடம்பர்கள் தொடக்கத்தில் வட கன்னட நாட்டுக் கோவாத் தீவு முதல் தென் கன்னட நாட்டுக் கடம்பத் தீவு ஈறாகவுள்ள தீவுகளில் இருந்துகொண்டு, கடற்குறும்பு செய்வதும், கரையிலுள்ள நாட்டில் நுழைந்து அரம்பு செய்வதும் மேற்கொண்டிருந்தனர்.


  1. இப் பங்களரைச் சிலப்பதிகாரம் “கொங்கணர் கலிங்கர் கொடுங் கருநாடர், பங்களர் கங்கர் பல்வேறு கட்டியர்” (25:156-7) என்று குறிப்பது ஈண்டுக் குறிக்கத் தகுவது. இது செய்யுளாகலின் வைப்புமுறை மாறியிருக்கிறது.
  2. Bom. Gazetteer, Kanara, Part ii. p. 78.