பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 115



இத் திருவோலக்கத்தைச் சூழ்ந்திருக்கின்றனர்; இது காண்டற்கு மிக்க இன்பமாக இருக்கிறது[1]” என்று பாடினர்.

இவ்வாறு திருவுலாப் போந்து வீற்றிருந்த வேந்த தனைச் சூழவிருக்கும் சான்றோரும் அரசியற் சுற்றத் தாரும் கேட்டு இன்புறுமாறு, கண்ணனார் பாடிய பாட்டு வேந்தனுக்கு பேருவகையளித்தது. இப் பாட்டின் கண் சேரலாதனுடைய படைமறவரது மனை வாழ்க்கையை உள்ளுறையால் உவகை மிகக் கண்ணனார் கூறியது, அவரது புலமை நலத்தை உயர்த்திக் காட்டிற்று. அப் பாட்டின்கண், களிற்றினம் மதஞ் சிறந்து மறலுங்கால் அவற்றின் மதநீரை மொய்க்கும் வண்டினங்களை, உடன் வரும் கன்றீன்ற பிடியானைகள் பசுங்குளவித் தழை கொண்டு ஓப்புகின்றன; களிற்றினம் படை மறவரையும், கன்றீன்ற பிடிகள் புதல்வரோடு பொலியும் மறமகளிரையும், குளவித்தழை கொண்டு ஓப்புவது வேண்டுவன நல்கி இரவலரை ஓம்புவதையும் சுட்டி, நாட்டவரது வாழ்க்கை நலத்தை வேந்தன் நன்கறியச் செய்து உவகை பெருகுவித்தது. சேரலாதன், அவரது புலமை நலத்தை வியந்து அவரைத் தன் திருவோலக்கத்து நல்லிசைப் புலமைச் சான்றோராக மேற்கொண்டு சிறப்பித்தான். கண்ணனார் மாந்தை நகர்க்கண் இருந்து வரலானார்.

இக் கண்ணனார் சேர நாட்டுச் சான்றோருள் ஒருவர். இவரது ஊர் குமட்டூர் என்பது. இப்போது


  1. பதிற். 12.