பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116 சேர மன்னர் வரலாறு



மலையாளம் மாவட்டத்தில் ஏர் நாடு எனப்படும் வட்டத்தின் ஒரு பகுதி இராம குடநாடு என இடைக் காலத்தே வழங்கிற்று. அதன்கண் உள்ள ஊர்களுள் ஒன்று இக் குமட்டூர்; இஃது உமட்டூர் எனவும் வழங்கும். உமட்டுதல் குமட்டுதல் என்றும், குமட்டுதல் உமட்டுதல் என்றும் மாறி வழங்குவது போல, உமட்டூர் குமட்டூர் என்றும் வழங்கியது. ஏனைச் சங்க நூல்கள் உமட்டூர் என்று குறிப்பது கல்வெட்டிலும் பதிற்றுப்பத்து ஏட்டிலும் குமட்டூர் என்றும் காணப்படுகிறது. இராம நாடு, பிராமியெழுத்துக் கல்வெட்டுக்களில் யோமி நாடு எனக் குறிக்கப்படுகிறது[1].

இமயவரம்பன் கண்ணனாரது புலமை நலம் கண்டு தனது திருவோலக்கத்தில் இருந்து வருமாறு பணித்து அவரைத் தன் மனம் விரும்பிய துணைவராகக் கொண் டான். அவரும் அவன்பால் அமைந்திருந்த குண நலங்களை அறிந்து இன்புற்றார். இமயவரம்பனான செயலால், நெடுஞ்சேரலாதனது புகழ் நாடெங்கும் பரவிற்று. கடற் குறும் பெருந்து கடம்பரை வெருட்டி யோட்டி அடக்கிய நிகழ்ச்சியால் கடல் வாணிகம் சிறந்தது. நாட்டு மக்களிடையே செல்வம் மிகுந்த நல்வாழ்வு நிலவிற்று.

இமயவரம்பன் புகழ், கொண்கானத்தின் வட பகுதியில் வாழ்ந்த ஆரிய வேந்தர் சிலர்க்குப்


  1. “யோமிநாட்டுக் குமட்டூர்ப் பிறந்தான் காவுதி ஈதனுக்குச் சித்துப் போசில் இளையார் செய்த அதிட்டானம்” - சித்தன்னவாசல் கல்வெட்டுக்கள். Also vide Proceedings and transactions of the 3rd Oriental Conferance, Madras. p. 280 and 296.