பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118 சேர மன்னர் வரலாறு



பிறர்க்குதவி” என்று பதிற்றுப் பத்தின் பதிகம் கூறுகிறது. மாமூலனார் என்னும் சான்றோர், “நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார், பணிநிறைதந்த பாடுசால் நன்கலம், பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல், ஒன்றுவாய் நிறையக் குவைஇ அன்று அவன் நிலந்தினத் துறந்த நிதியம்[1]” என்று இசைக்கின்றனர்.

இவ்வண்ணம் இமயவரம்பன், ஆரியர் கடம்பர் யவனர் என்போருடைய புறப்பகை கடிவதில் பெரிதும் ஈடுபட்டிருந்ததனால், உண்ணாட்டில் வாழ்ந்த குறுநில வேந்தர் சிலர், அவனது பொருமுரண் இயல்பு நோக்காது, திரை செலுத்துவதைக் கைவிட்டுப் பகைத்து அவன் சீற்றத்துக்கு உள்ளாயினர். அவனும் அவரது செருக்கடக்கி உட்பகையைப் போக்கக் கருதி அவர்தம் நாட்டின் மேற் படை கொண்டு சென்றான். பகைத்த வேந்தருடைய மதிலும் காவற்காடும் அழிந்தன, நிரை நிரையாகச் சென்ற அவனது படைவெள்ளம் பகைவர் படை வலியைச் சிதைத்து அவரது செல்வத்தைச் சூறையாடிற்று. படைமறவர் அந் நாடுகளில் தங்கிப் பகைவர் வாழ்ந்த பகுதிகளைத் தீக்கிரையாக்கினர்; தீப் பரவாத இடங்களை உருவறக் கெடுத்தனர். பாழ்பட்ட இடங்களில் வேளையும் பீர்க்குமாகிய கொடிகள் வளர்ந்து படரலுற்றன. நீரின்றிப் புலர்ந்து கெட்ட புலங்களில் காந்தள் முளைத்து வளர்ந்து மலர்ந்தன. செல்வர் வாழ்ந்த இடங்களில் வன்கண்மை மிக்க மறவர் குடிபுகுந்தனர்; பனையோலை வேய்ந்த குடில்கள் பலப்பல உண்டாயின[2].


  1. அகம். 127.
  2. பதிற். 15.