பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 119



இந்நிலை உண்டாகக் கண்ட பகைவேந்தர் தாம் செய்த தவற்றை யுணர்ந்து இமயவரம்பனது அருளைப் பெறற்கு முயன்றனர். அவன் அவர்களை ஒறுப்பதே கருதி யொழுகினான். மறத்துறையால் எய்தும் புகழ் அறச்செய்கையாற்றான் நிலை பெறும் என்பதை மறந்து, இமயவரம்பன் மறமே நினைத்து ஒழுகுவது நன்றன்று எனக் கண்டார் கண்ணனார். சேரலாதனைக் கண்டு, “வேந்தே, நின் வலி அறியாது பொருது கெட்ட வேந்தர் நாடு எய்திய அழிவும் கண்டேன்; பின்னர் நீ காக்கும் நாட்டையும் கண்டேன்; நினது நாடு மலைபடு பொருளும் கடல்படு பொருளும் ஆறுபடு பொருளும் பெருகவுடையது; ஊர்களில் விழாக்கள் மிகுந்துள்ளன ; மூதூர்த் தெருக்களில் கொடி நுடங்கும் கடைகள் மலிந்துள்ளன ; நின் வயவர் பரிசிலர்க்குச் செல்வமும் யானைகளும் பரிசில் நல்குகின்றனர்; நெடுஞ்சேரலாதன் நீடு வாழ்க என்ற வாழ்த்து அவர் வாயில் மலர்ந்த வண்ணம் இருக்கிறது; பகையால் விளையும் வெய்துறவு அறியாத மக்கள் இன்ப வாழ்வில் திளைக்கின்றனர்; அறவோர் பலர் ஒன்று மொழிந்து அடங்கிய கொள்கையும் துறக்கம் விரும்பும் வேட்கையும் கொண்டு அறம் புரிகின்றனர்; நீ காத்தலால் அவரவரும் விரும்பியன விரும்பியவாறு பெற்று இனிது உறைகின்றனர்; நாட்டில் நோயில்லை; கள்ளுண்டு களிக்கும் இயவர், இவ்வுலகத்தோர் பொருட்டு நீ ‘வாழியர்’ என நின்னை நினைத்து இசைப்பது கண்டேன்[1]” என்று மொழிந்து “இத்தகைய இன்ப வாழ்வு இச் சேர நாடு முற்றும் நிலவச் செய்க” என்று வேண்டினர்.


  1. பதிற். 15.