பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 121



தோட்டங்களும், வண்டு மொய்க்கும் பொய்கைகளும் எம்மருங்கும் காட்சியளித்தன. அதனால் சான்றோர் பாட்டெல்லாம் அந் நலங்களையே பொருளாகக் கொண்டு விளங்கின. இப்போது நின் தானை சென்று தாக்கிய பின், அவை ‘கூற்று அடூஉ நின்ற யாக்கை போலப் பொலிவு அழிந்து கெட்டன; கரும்பு நின்ற வயல்களில் கருவேலும் உடைமரங்களும் நிற்கலாயின், ஊர் மன்றங்கள் நெருஞ்சி படர்ந்த காடுகளாயின; காண்போர் கையற்று வருந்தும் பாழ்நிலமாகியது காண மக்கட்கு நின்பால் அச்சம் பெருகிவிட்டது[1]” என்று இயம்பினார்.

இதனைக் கேட்ட வேந்தன் உள்ளத்தில் அருள் உணர்வு தோற்றிற்று. போருண்டாயின் இத்தகைய விளைவு இயல்பு என்பது ஒருபால் விளங்கினும், ஒருபால் அருளறம் அவன் உள்ளத்தில் நிரம்பிற்று. மக்களது வருத்தம் நினைக்க அவன் நெஞ்சு நெகிழத் தொடங்கிற்று. கண்ணனார், “வேந்தே, நீ காக்கும் நாட்டில் காடுகளில் முனிவர் உறைகின்றனர்; முல்லைக் கொல்லைகளில் மள்ளரும் மகளிரும் இனிது வாழ்கின்றனர்; மக்கள் வழங்கும் பெருவழிகள் காவல் சிறந்துள்ளன; குடிபுறந் தருபவரும் பகடு புறந் தருபவரும் இனிதே இருக்கின்றனர்; கோல் வழுவாமையால் மக்களிடையே நோயும் பசியுமில்லை; மழை இனிது பெய்கிறது[2]” என்று பாடி அவனை இன்புறுத்தினார்.


  1. பதிற். 13.
  2. ஷ 13.