பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122 சேர மன்னர் வரலாறு



இவ்வாறு கண்ணனார் உரையால் அருள் நிறைந்த உள்ளமுடையனான இமயவரம்பன், தன்னைப் பணிந்து திறை கொடுத்துப் புகல்வேண்டிய வேந்தர்களை அன்பு செய்து ஆதரித்தான். அவனது அச் செயல் அவனுடைய தானைத் தலைவர் பாலும் தானை மறவர்பாலும் சென்று படர்ந்தது. ஒருகால், கண்ணனார் நெடுஞ்சேரலாத னுடைய பாடியிருக்கையொன்றிற்குச் சென்றிருந்தார். அப்போது பகைவருடைய தானை, போர்க்குச் சமைந்து நின்றது. அந் நிலையில், சேரலாதனுடைய தானை மறவரது ஏவல்வழி நின்ற இவர், “பகைவரை நோக்கி, அரணம் காணாது அலமந்து வருந்தும் உலகீர், உங்கட்கு இனி இனிய நீழலாவது எம் வேந்தனது வெண்குடை நீழலே; இதன்கண் விரைந்து வம்மின்” என்று இசைத்தனர். அதுகண்ட குமட்டூர்க் கண்ணனார்க்கு இறும்பூது பெரிதாயிற்று. நெடுஞ்சேரலாதனைக் கண்டார்; அவனோ பெரும் தவறு செய்த பகைவராயினும் அவர்கள் பணிந்து வருவரேல் பேரருள் செய்தான். உடனே அவரது உள்ளத்தில் அழகியதொரு பாட்டு உருப்பட்டு வெளிவந்தது. “வேந்தே, நீ கடல் கடந்து சென்று, பகைவர் தங்கிக் குறும்பு செய்த தீவுக்குட் புகுந்து, அவரது காவல் மரமான கடம்பினைந் தடிந்து, அம் மரத்தால் செய்து போந்த முரசுக்குப் பலிக்கடன் ஆற்றும் இயவர், ‘அரணம் காணாது வருந்தும் உலகீர் , எம்முடைய வேந்தனது வெண்குடை நீழலே உமக்கு நல்ல அரணாவது’ என அறைந்து அதனைப் பரவுகின்றனர்; பாடினி பாடுகின்றாள்; பகைவர் பெரிய தப்பு செய்யினும் அவர்கள் பணிந்து போந்து திறை