பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130 சேர மன்னர் வரலாறு



புகழ்மிக்கு விளங்கும் கண்ணனூர் அன்று இவர் பெயரால் ஏற்பட்டிருக்குமோ என நினைத்தற்கு இடமுண்டாகிறது. இடைக் காலத்தே இது சிறைக்கல் பகுதியை ஆண்ட வேந்தரது தலைநகரமாய் விளங்கிற்று. மேலும், அவன் உம்பற்காடு என்ற பகுதியில் ஐஞ்ஞுறு ஊர்களைக் கண்ணனார்க்குப் பிரமதாயம் கொடுத்தான். உம்பற்காடு என்பது இப்போது நீலகிரிப் பகுதியில் நும்பலக்காடு என்ற பெயர்க் கொண்டு நிலவுகிறது. இஃது, இப்போது வயனோடு என வழங்கும் பண்டைய பாயல் நாட்டின் ஒரு பகுதியாக இருந்து, ஆங்கிலேய ருடைய ஆட்சிக் காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் சேர்க்கப்பெற்றது.[1] திருவிதாங்கூர் அரசைச் சேர்ந்த வைக்கம் என்ற நகரத்தில் உம்பற்காட்டு வீடு என ஒரு வீடு இருந்து உம்பற்காட்டின் பழமையை உணர்த்தி நிற்கிறது[2].

இவ்வாறு இமயவரம்பனுடைய பேரன்பைப் பெற்றுக் கண்ணனார் சிறப்புடன் இருந்து வருகையில், அவர்க்குத் தமது ஊர்க்குச் செல்லவேண்டும் என்ற விருப்பமுண்டாயிற்று; வேந்தனிடத்தில் தமது கருத்தைக் குறிப்பாய்த் தெரிவித்தார். இப்போது சேரலாதனுக்கு முப்பத்தெட்டாம் ஆட்சியாண்டு நடைபெற்றுக் கொண் டிருந்தது. கண்ணனார்க்கும் முதுமை நெருங்கிற்று. இமயவரம்பன் அவரது விருப்பத்தைப் பாராட்டித் தன் ஆட்சியில் அடங்கிய உம்பற்காட்டின் தென்பகுதியான தென்னாட்டு வருவாயில் ஒரு பாகத்தை அவர் பெறுமாறு திருவோலை எழுதித் தந்து சிறப்பித்தான்;


  1. Malabar Series: Wynad. p.5.
  2. Cera kings by K.G. Sesha Iyer p. 14.