பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136 சேர மன்னர் வரலாறு



இக் கோதமனார் பாலையூர் என்னும் ஊரினர்: அவ்வூர் குட்ட நாட்டில் இப்போது பொன்னானி வட்டத்தில் சாவக்காடு என்ற பகுதியில் இனிதே உளது. கோதமனார் பாலையூரில்[1] வேதியர் குடியில் தோன்றி நல்லிசைப் புலமைப் பெற்று விளங்கினார்.

அந் நாளில், குட்டுவன் உம்பற்காட்டைக் கைப்பற்றி, அகப்பாவை நூறிக் கொங்கு நாட்டை வென்று சிறந்து விளங்கியது, அவர்க்கு மிக்க மகிழ்ச்சி தந்தது. அவர் குட்டுவனைக் கண்டு, “வேந்தே, கழி சினம், கழி காமம், கழி கண்ணோட்டம், அச்ச மிகுதி, பொய் மிகுதி, அன்பு மிகவுடைமை, கையிகந்த தண்டம் என்பன நல்லரசர்க்கு ஆகா என விலக்கப்பட்ட குற்றங்களாகும்; இவற்றை முற்றவும் கடிந்து, தன் நாட்டவர், பிறரை நலிவதும் பிறரால் நலிவுறுவதும் இன்றி, பிறர் பொருளை வெஃகாமல், குற்றமில்லாத அறிவு கொண்டு, துணை வரைப் பிரியாமல், நோயும் பசியுமில்லாமல் இனிது வாழவும், கடலும் கானும் வேண்டும் பயன்களை உதவவும் நன்கு அரசு புரிந்த உரவோர் நின் முன்னோர்; நீ அவர் வழி வந்த செம்மல்; கயிறு குறு முகவையை ஆனினம் மொய்க்கும் கொங்கு நாட்டை வென்று கொண்டாய்; ஐயவித்துலாமும் நெடுமதிலும் கடிமிளை யும் ஆழ்கிடங்கும் அரும் பணமும் பொருந்திய அகப்பாவை உழிஞைப் போர் செய்து வென்று கைப்பற்றி நூறினாய்; வருபுனலை அடைப்பவரும், நீர் விளையாடுபவரும், வில்விழாச் செய்பவருமாய்


  1. S.I.I. Vol. V. No. 784.