பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138 சேர மன்னர் வரலாறு



இன்புற்று வாழும் மக்கள் நிறைந்த மருதவளம் பெற்றுச் செருக்கிய பகைநாட்டவர், நீ சீறியபடியால், வலி அழிந்து ஒடுங்குவது ஒருதலை; அவர் நாடுகள் நண்பகல் போதிலே குறுநரிகள் கூவ, கோட்டான்கள் குழற, பேய்மகள் கூத்தாடுமாறு பாழாவது திண்ணம்[1] என்று குட்டுவனுடைய தொல்வரவும் ஆள்வினைச் சிறப்பும் போர் வென்றியும் பாராட்டிப் பாடினார். அது கேட்டுப் பேருவகை கொண்ட குட்டுவன் அவரைத் தன் அரசியற் சுற்றத்தாருள் ஒருவராகக் கொண்டான்.

குட்டுவனுக்கு அரசியல் ஆசிரியரான நெடும்பார் தாதயனார் முன்னின்று புரோகிதம் செய்ய, பாலைக் கோதமனார் உரிய துணைபுரியப் பெருஞ்சோற்றுவிழா நடைபெற்றது. போர்முரசு எண்டிசையும் எதிரொலிக்க முழங்கிற்று; முரசுக்குக் குருதியூட்டிப் பலிதருவோன் கையில் பிண்டத்தை ஏந்தினான்; அதுகண்டு பேய் மகளிர் கை கொட்டிக் கூத்தாடினர். அக் குருதி கலந்த சோற்றை எறிந்தபோது சிற்றெறும்பும் அவற்றை மொய்த்தற்கு அஞ்சின; அவற்றைக் காக்கையும் பருந்துமே உண்டன. பின்னர், கொடைமுரசு முழங்கிற்று. போர் மறவரும் பரிசிலரும் அம் முரசின் ஓசை கேட்டு வந்து கூடினர். அப்போது இயவர் இனிய இசைவிருந்து நல்க, போர்மறவர்க்குப் பெருஞ்சோறு வழங்கப்பெற்றது.

இவ் விழாவினைச் சிறப்பித்துக் கோதமனார் இனிய பாட்டொன்றைப் பாடினர். அப் பாட்டின்கண்


  1. பதிற். 22.