பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140 சேர மன்னர் வரலாறு



மற்றொருபால், வரகின் வைக்கோலால் கூரை வேய்ந்த வீடுகள் நிறைந்த புன்செய்க் கொல்லைகள் உள்ளன. அங்கு வாழ்பவர், வரும் விருந்தினர்க்குத் தினைமாவைத் தந்து விருந்தோம்புகின்றனர்; ஒருபால், ஈரமின்மையால் பூக்கள் வாடி உதிர்ந்து நிலமும் பயன்படும் தன்மை திரிந்து மணல் பரந்து பொலிவு இன்றி இருக்கிறது; எங்கும் மணலும் பரல்களும் பரந்து பூழி நிறைந்திருக்கும் இப் பகுதியில், மகளிர் காலில் செருப்பணிந்து திரிகின்றனர். இந் நிலங்களில் வாழும் வேந்தரும் குறுநிலத் தலைவரும், நின் பெருஞ்சோற்று விழாவில் எழும் முரசு முழக்கம் கேட்டு, உள்ளம் துளங்கி உலமருகின்றனர்; வலிய அரண் பெற்றும், மனத் திண்மை இன்மையால், அவர்கட்கு நின் விழாவொலி பேரச்சத்தைத் தருகிறது[1] என்று இவ்வாறு கோதமனார் கூறினார்.

அகப்பாவை வென்றது முதல் குட்டுவனது புகழ் நாடெங்கும் பரவியிருந்தமையின் நாட்டில் மக்கள் வாழ்வு இனிது இயங்கிற்று. போர் இல்லாமையால் மறவர் தத்தம் மனைகளில் இருந்து தமக்குரிய தொழில் செய்து வந்தனர்; வினை கருதியும் பொருள் கருதியும் பிரியும் பிரிவு, அவர்தம் வாழ்க்கையில் நிகழாமையால், ‘புலம்பா உறையுள்’ வாழ்க்கையே மலிந்திருந்தது. தானை மறவர் சிலர் வெறிதே மடிந்திருந்தனர். பிற நாடுகள் பெருவறம் கூர்ந்து வருந்துங் காலத்தும், குட்ட நாட்டிற் பாயும் பேரியாறு, விடரளை நிறையப் பெருகிப்


  1. பதிற். 30.