பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்யானைச் செல்கெழு குட்டுவன் 141



புலங்களில் பரந்து நீர் நிரம்புமாறு காட்டுப்பூக்களைச் சுமந்து வந்து பாய்வதில் தப்பாதாயிற்று. அதனைத் தடுத்து நிறுத்தி வயல்களில் தேக்குங்காலத்து, உழவர் செய்யும் பூசல் ஒன்றே நாடு எங்கணும் விளங்கித் தோன்றிற்று. இதனால் குட்டுவன் நாடே திருவுடையது எனப்படுவதாயிற்று. கோதமனார் இந்த நலத்தை அழகியதொரு பாட்டாகப்[1] பாடி வேந்தனை இன்புறுத்தினார்.

இவ்வாறு இருக்கையில் சேர நாட்டுக்குக் கிழக்கில் உள்ள கொங்கு நாடு குட்டுவனது முன்னோர் காலத்தே சேர வேந்தர் ஆட்சியில் இருந்த தெனினும், அங்கே இருந்து நாடு காவல் புரிந்த வேந்தர் சிலர், அயலில் இருந்த குறுநிலத்தவர் சிலரைத் துணையாகக் கொண்டு பாலைக்காட்டு வழியாகக் குட்ட நாட்டிற் புகுந்து குறும்பு செய்தனர். குட்டுவரும் பூழியரும் நிறைந்த பெரும்படை யொன்றைக் கொண்டு குறும்பு செய்து போந்த கொங்கரைக் குட்டுவன் வெருட்டிச் சென்று, மேல் கொங்கு கீழ் கொங்கு எனப்படும் இரு கொங்கினையும் கைப்பற்றித் தன் அரசியல் ஆணைவழி நிற்கச் செய்தான். அப்போது கீழ் கொங்கு நாட்டில் இப்போது தாராபுரம் எனப்படும் ஊர் வஞ்சி என்ற பெயருடன் சிறப்புறுவதாயிற்று. அந் நாளில் கொங்கு நாடு நீர் வளங்குன்றி முல்லை வளமே சிறந்து நின்றது. அதனால், அங்கு வாழ்ந்தவர் அனைவரும் ஆ காத்து ஓம்பும் ஆயர்களாகவே இருந்தனர். கொங்கு நாட்டில்


  1. பதிற். 28.