பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்யானைச் செல்கெழு குட்டுவன் 143


பகைவர் நாட்டில் வாழ்ந்த மக்களும் படைவரவு கண்டு அஞ்சி வேறு இடங்கட்கு ஓடிவிட்டனர்; ஊர்கள் பல அழிந்தன; அழிந்த இடங்களில் காட்டு விலங்குகள் வாழலுற்றன. பகைவர் செய்த குறும்பினை அடக்கி வெற்றி காணும்போதெல்லாம் குட்டுவன் தன் தானை வீரரைக் கூட்டி விழாக் கொண்டாடித் தானை மறவர்க்கும் பிறருக்கும் பெருங்கொடை வழங்கினன்.

சிற்றரசன் ஒருவனை வென்றவிடத்துச் சிறுவிழா நிகழினும் அதனைச் சிறப்பாகக் கொண்டாடுவது குட்டுவனுக்கு இயல்பு. ஒருகால், அத்தகைய சிறுவிழா ஒன்று நிகழ்ந்தபோது, பாலைக் கோதமனார் கலை வல்ல இரவலர் சுற்றம் உடன்வர வந்தார். விழா நிகழும் இடத்தருகே இருந்த வயல் வரம்புகளில் உன்னமரங்கள் நின்றன; அவற்றின் கவடுகளில் சிள் வீடு என்னும் வண்டுகள் தங்கிக் கறங்கின ; ஊர் மன்றங்களில் தங்கித் தெருக்களிற் பாடிச் செல்லும் பரிசிலர் போந்து உண்பவுண்டு, இழையணிந்து உவகை மலிந்து கூத்தாடினர். அவர்கட்குக் குட்டுவன் பெரு விலையை யுடைய நன்கலங்களைப் பரிசில் வழங்கினான். அக்காலை அவ்விடம் போந்த கோதமனாரைக் குட்டுவன் கண்டு அன்போடு வரவேற்றுச் சிறப்பித்தான். அப்போது அவன், நாட்டின் நலம் கூறுமாறு கோதமனாரை வினவினான். அவனுக்கு அவர் நாட்டின் நலத்தை எடுத்துரைத்து முடிவில் தான் வழியில் கண்ட காட்சியை விளக்கினர்; “வேந்தே, சிறுமகிழ்வு நிகழினும் பெருங்கொடை புரிவது உனது இயல்பு; உனது இப்பண்பை அறியாது பகைத்துக் கெட்ட