பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்யானைச் செல்கெழு குட்டுவன் 145



வழிபட்டு அவரால் உலகு பரவும் ஒளியும் புலவர் பாடும் புகழும் பெறுகின்றாய்; நிலமுதலிய ஐந்தும் போல அளப்பரிய வளமுடையவனாகிய உன் பெருக்கத்தை யாங்கள் நன்கு கண்டோம்; உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமாயினும் வருவோர்க்கு வரையாது வழங்கும் சோற்றால் வாடா வளமுடையது நின்நாடு: நின்வளன் வாழ்க[1]” என்று இயம்பினார்.

எதிர்ந்த வேந்தர் ஈடழிந்து கெடுவதும், தனது நாடு வளமிகுந்து சிறப்பதும் கண்ட குட்டுவனுக்குப் பகைமை அழிக்கும் போர்வினையிலே விருப்பம் மிகுந்தது. ஒருசில வேந்தர் அவனது படைப் பெருமை அறியாது போர் தொடுத்தனர்; அவரும் அழிந்தனர். அவர்களுடைய நாடுகளும் யானை புக்க புலம்போலப் பெரும் பாழாயின். பகையிருளைக் கடிந்து நாட்டில் வளம் பெருகச் செய்வது ஒன்றுதான் வேந்தர் செயல் என்று அறிஞர் கூறமாட்டார்; நாட்டு மக்கட்கு வேண்டிய நலம் புரிந்து இம்மை மாறி மறுமையில், செல்லும் உலகத்துச் சிறப்பெய்த வேண்டி அறம் புரிவதும் வேந்தர் செய்யத்தக்க கடனாம் என்பதையும் உணர்த்துவர்; அதுவே தமக்கு முறை என்று கோதமனார் கண்டார். அவன் உள்ளத்தில் அருளறம் தோன்றி நிலைபெறல் வேண்டும் எனக் கருதி ஒரு சூழ்ச்சி செய்தார்.

குட்டுவன் அமைதியோடு இருக்கும் செவ்வி நோக்கி, அவனுக்கு அவன் செய்த போர் நலத்தை


  1. பதிற். 25.