பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்யானைச் செல்கெழு குட்டுவன் 151



இன்புற்றான். எவ்வுயிர்க்கும் தீங்கு நினையாத கொள்கையும், சீர்சான்ற வாய்மையுரையும் அவன்பால் சிறந்து விளங்கின. சொல்லாராய்ச்சி, பொருளாராய்ச்சி, சோதிட நூல் ஆராய்ச்சி வேதாமங்களைக் கேட்டல் முதலிய நெறிகளில் குட்டுவன் கருத்துப் பெரிதும் ஈடுபடுவதாயிற்று.

அன்பே நினைந்து ஒழுகும் முனிவர் உறவும், அறமே செய்தொழுகும் அந்தணர் கூட்டமும், வேள்வி வாயிலாகத் தேவரை இன்புறுத்தும் வேதியர் சுற்றமும் குட்டுவனைச் சூழ்ந்து நின்றன. அவனும் இம் முனிவர் முதலிய சான்றோர்களின் சிறந்த துணையை நயந்து வேள்விகள் பல செய்யலுற்றான். வேள்வித் தீயில் நெய் பெய்து எழுப்பும் ஆவுதிப் புகை அவனுக்கு மிக்க இன்பத்தைச் செய்தது. ஒருபால், தன்னை நாடி வருவோர்க்கு வரைவின்றிப் பெருஞ்சோறு வழங்கி விருந்தோம்புமாறு ஏற்பாடு செய்தான். வேள்வியில் எழும் ஆவுதிப் புகையும், விருந்தோம்புங்கால் சோற்றிடைப் பெய்யும் நெய்ப்புகையும், நறுமணங்கமழ விண்படர்ந்து வானுலகத்துத் தேவரை இன்புறுத்தின. அதனால், குட்டுவனது வாழ்க்கை வானுலகத்துத் தேவர் விரும்பும் சிறப்பு மிகுவதாயிற்று[1].

குட்டுவன்பால் நாடோறும் பரிசிலர் போந்து அவன் புகழைப் பாடினர்; அவர்கட்குப் பகைவர் நல்கிய நன்கலங்களை வழங்கி அவர்கள் உண்டு தெவிட்டு மளவும் கள்ளும் தேறலும் தந்து களிப்பித்தான்.


  1. பதிற். 21.