பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152 சேர மன்னர் வரலாறு



இவ்வகையால் அவனது புகழே நாடெங்கும் மிகுந்தது. அவன் மனப் பண்புக்கு ஏற்ற வகையில் அவன் மனைவியும் கற்பால் நாட்டவர் புகழும் நல்லிசை எய்தினாள். முல்லை மணம் கமழம் கூந்தலும், திருமுகத்தில் மலர் போல் அகன்று அழகுறத் திகழும் கண்களும், காந்தள் மலர்ந்ததொரு திப்பிய மூங்கில்வகை போலும் தோள்களும் உடைமையால், அவளது உருநலம் புலவர் பாடும் புகழ்மிக்கு விளங்கிற்று.

இத்தகைய நற்குண நற்செய்கைகளால் பாண்புற்ற மனைவியுடன் வாழ்ந்த குட்டுவனுக்கு ஆண்டு முதிரத் தொடங்கிற்று. அரசியற் புரோதிரான நெடும்பார தாயனார் உடன்வரக் குமரித் துறைக்குச் சென்று வல்லாரும் மாட்டாருமாகிய பல்வேறு இரவலர்க்கும் ஏனைப் பார்ப்பார்க்கும் அவன் பெரும் பொருளை வழங்கி “இரு கடல் நீரும் ஒரு பகலில்[1]” ஆடினான்.

அதன் முடிவில், வேளிரும் குட்டுவரும் பூழியரும் கொங்கரும் ஆகிய நாட்டுத் தலைவர் உடன்வர, அவன் குட்ட நாட்டில் உள்ள அயிரைமலைக்குச் சென்று, அங்கே கோயில் கொண்டிருக்கும் கொற்றவைக்குப் பரவுக்கடன் செய்தான்.

பேரியாறு தோன்றும் ஏரிக்கு அண்மையில் நிற்கும் மலை முடிக்குப் பண்டை நாளில் அயிரை என்று பெயர் வழங்கிற்று. அதிலிருந்து தோன்றிவரும் அயிரையாறு இப்போது சவரிமலைப் பகுதியில் தோன்றிவரும் பம்பையாற்றோடு கூடிப் பெருந்தேனருவி என்று பெயர்


  1. பதிற். : ii பதிகம்.