பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154 சேர மன்னர் வரலாறு



ஆவுதிப் புகையும், விருந்தினரை உண்பிக்குமிடத்து எழும் நெய்யாகிய ஆவுதிப் புகையுமாகிய இரண்டின் நறுமனத்தாலும், வானுலகத் தேவர் விரும்பும் சிறப்பும் செல்வங்களும் நீ பெற்றுள்ளாய்; மேலும், நீ செருப்புமலைக்குரிய பூழியர்கட்குத் தலைவன்; மழவராகிய சான்றோர்க்கு மெய்ம்மறை; அயிரை மலையையுடையவன்; யாண்டு தோறும் பருவம் தப்பாது நன்மழை பெய்வதால் வளம் மிகப்படைத்து நோயில்லாத வாழ்வு திகழ, இயல்பாகவே முல்லை மணம் கமழும் கூந்தலும் மழைக்கண்களும் மூங்கில் போலும் தோள்களுமுடைய நின் மனைவியுடன் பல்லாயிர வெள்ளம் ஆண்டுகள் வாழ்வாயாக[1] என்று வாழ்த்தினார்.

இவ்வாழ்த்துரையைக் கேட்ட குட்டுவன் பாலைக்கோதமனார்க்கு மிக்க பரிசில் நல்கிச் சிறப்பிக்க நினைத்தான். அவன் மனக்குறிப்பைக் கோதமனார் கண்டு கொண்டார். ஆயினும் அவரது உள்ளம் வேறொன்றை நாடிற்று. உடனே குட்டுவன் அவரை நோக்கிச் “சான்றீர், நீர் வேண்டுவதைக் கொண்மின்” என்றான். அவர் “வேந்தே , யான் இதுவரை நின்னோடே யிருந்து நீ தந்த பொருள்களால் செல்வ வாழ்வு பெற்றேன். இம்மை வாழ்வை இனிது கழித்த யான், மறுமையிலும் துறக்க இன்பம் பெற விழைகின்றேன்; அது குறித்து யான் என் பார்ப்பனியுடன் வேள்விகள் ஒரு பத்துச் செய்தல் வேண்டும்; அவ்வேள்விகட்கு


  1. பதிற். 21.