பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் 159



புடையதாதல் வரலாற்று நெறிக்கு ஒத்தது. புன்றுறை நாட்டுக்குத் தென்மேற்கிலும் தெற்கிலும் உள்ள மேலைக் கொங்காகிய மீகொங்கு நாட்டை நன்னன் என்றொரு தலைவன் பொள்ளாச்சிக்கு அண்மையில் உள்ள ஆனைமலை என்னும் பகுதியிலிருந்து ஆட்சி செய்தான். ஆனைமலைக்குப் பழம்பெயர் நன்னனூர் என்பது அவ்வூர்க் கல்வெட்டுகளால்[1] தெரிகிறது. தகடூர் நாட்டை அதியர் என்னும் குறுநிலத் தலைவர் ஆட்சிபுரிந்து வந்தனர். அவரது தகடூர் இப்போது சேலம் மாவட்டத்தில் தருமபுரி என்ற பெயருடன் நிலவுகிறது. அப்பகுதியில் உள்ள அதியமான் கோட்டை என்ற ஊர் அதமன் கோட்டையென மருவி நின்று வரலாற்றுச் சான்றாக விளங்குகிறது.

வேள்புலத் தலைவனான நன்னன், பெருஞ்சோற்றுதியன் முதலிய சேர மன்னர்களால் நன்னன் உதியன் என்ற சிறப்புப் பெயர் நல்கப் பெற்றுச் சிறந்து விளங்கினான். அவன் அரசியல் நுட்பமும் புலவர் பாடும் புகழும் படைத்தவன். அதனால் அவன்பால் வேளிரும் கங்கரும் கட்டியரும் பிற குறுநிலத் தலைவரும் நட்புற்றிருந்தனர். நன்னனுடைய மெய்ம்மைப் பண்பும் காவல் மாண்பும் நோக்கி, வேள்புல வேந்தர் தம்முடைய பெருநிதியை அவனுடைய பாழிநகர்க்கண்[2] வைத்திருந்தனர். பாழிநகர் இப்போது வட கன்னடம் மாவட்டத்தில் ஹோனவாறென்னும் பகுதியில் பாட்கல் (பாழிக்கல்) என்ற பெயருடன் இருக்கிறது. நன்னனது


  1. Ep. A.R. No. 214 of 1928.
  2. அகம். 258.