பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் 163



வேறாகத் தோன்றுகிறது. பிறநாட்டு ஊர்ப்பெயர்களையும் மக்கட் பெயர்களையும் பிறவற்றையும் தங்கள் மொழியில் மொழிபெயர்த்துக் கொண்டு வழங்கும் வழக்கம் வடமொழியாளரிடத்தன்றிப் பிற எந்நாட்டு எம் மக்களிடத்தும் காணப்படுவதில்லை. பிறரெல்லாம் பிறநாட்டு ஊர் மக்கட் பெயர்களைத் தங்கள் மொழி நடைக்கேற்பத் திரித்து வழங்குவர். அவர்களைப் போலவே தமிழர், மேனாட்டு அயோனியரை யவனரென்றும், பர்ஷியரைப் பாரசிகரென்றும், இங்கிலாந்து மக்களை ஆங்கிலரென்றும், பிற மக்கட் பெயர் இடப் பெயர்களை, பேதுரு, யாக்கோபு, ஏசு, சீதக்காதி, பெத்தலை, மதினா என்றும் திரித்து வழங்குவர். இவ்வாறு திரித்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ் இலக்கணமே விதித்திருக்கிறது[1]. இதனால் மொழிபெயர்த்து வழங்கும் வழக்காறு தமிழ் மரபு அன்று என்பது இனிது விளங்குதலால், இளங்கோசர் என்பது “வத்ஸகோசர்” என்ற வடமொழியின் மொழிபெயர்ப்பு என்றால் பொருந்தாது. கோசர்கள், துளுநாட்டிலும், பாண்டி நாட்டிலும், கொங்கு நாட்டிலும் இருந்தவர்ரென்பது தோன்றப் பல குறிப்புகளை வழங்கும் சங்க நூல்கள், இவர்களை வட புலத்துக் கோசாம்பி நாட்டினரென்றோ, கோசல நாட்டினரென்றோ தோன்ற ஒரு சிறு குறிப்பும் குறிக்கவில்லை. இனி, வத்ஸன் ஆண்ட நாடு வத்த நாடு என்றும், வத்ஸர் தலைவனை வத்தவர் பெருமகன் என்றும் வழங்குவது தமிழ் மரபு.


  1. தொல். சொல். எச்ச.5.