பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164 சேர மன்னர் வரலாறு



வத்ஸனை இளையன் என்றோ, வத்ஸ நாட்டினை இளநாடு என்றோ மொழி பெயர்த்தது கிடையாது. ஆகவே இளங்கோசரென்பது வத்ஸகோசர் என்பதன் மொழிபெயர்ப்பு எனக் கூறுவது உண்மை அறிவுக்குப் பொருத்தமாக இல்லை. மேலும், தமிழகத்து மக்கள் வகையினருள் கோசரென்பார் ஒருவகை இனத்தவர் என்றற்கும் இடமில்லை.

இனி, இக்கோசர், வடவருமல்லர், தமிழருமல்லர் எனின், வேறு நாடுகளிலிருந்து கடல் கடந்து போந்து குடியேறியவர் என்பது பெறப்படும். வடநாட்டினின்றும் புதியராய்ப் போந்த பிறரை “வம்ப வடுகர்” என்றும், “வம்ப மோரியர்” என்றும் சான்றோர் கூறியது போல், இவர்களை “வம்பக் கோசர்” என்று கூறாமையால் இவர்கள் பன்னெடு நாட்களுக்கு முன்பே தமிழகத்திற் குடிபுகுந்தவர் என்பது தெளிவாம். சங்க காலத்தேயே மேலைக் கடற்கரைப் பகுதியில், யவனர் பலர் குடியேறி இருந்தனர் என்பது வரலாறு கூறும் செய்தியாகும். அவர்கட்குப்பின் இடைக்காலத்தே சோனகரும். பின்னர் ஐரோப்பியரும் வந்து சேர்ந்தனர். இவ்வாறு வந்தோருள், பாபிலோனிய நாட்டினின்றும் போந்து தென்னாட்டிற் குடியேறியவர் இக்கோசர்கள் என்று அறிகின்றோம்.

தைகிரீஸ் (Tigris) ஆற்றுக்குக் கிழக்கில் சகராசு மலைப் பகுதியில் (Zagros Mountains) வாழ்ந்த பழங்குடி மக்கட்குக் கோசர் (Kossears) என்பது பெயர். வில்வேட்டம் புரிவதே அவரது தொழில். பின்னர் அவர்கள், மலையடியில் வாழ்ந்த ஈரானியர் இனத்தைச்