பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170 சேர மன்னர் வரலாறு



பொறுத்து, அவரது நெஞ்சினைத் தன்பால் அன்பு கொள்விப்பதில் நார்முடிச் சேரல் நலஞ் சிறந்து விளங்கினான்[1]. தன் செயலால் பகைவர்க்குத் துன்பமும் நகைவராகிய பாணர் கூத்தர் முதலிய பரிசிலர்க்கும் நண்பர்களுக்கும் இன்பமும் உண்டாவது காணுங்கால், உள்ளத்தே மகிழ்ச்சி யெழுமாயின், அதனையும் நார்முடிச் சேரல் தன் அறிவாலும் குணத்தாலும் அடக்கித் தனக்குரிய செம்மை பிறழாமல் நிற்கும் திண்மையால் சான்றோர் பரவும் சால்பு மிகுந்தான். இனியவை பெற்றவிடத்து அவற்றைத் தனித்திருந்து நுகர்வதில் மக்களுயிர்க்கு விருப்புண்டாவது இயல்பு. அவ் விருப்பத்தை அடக்கும் உரனும், பிறர்க்கு வழங்குதற்கென்றே பொருளீட்டம் அமைவது என்ற எண்ணமும், என்றும் பிறர்க்கென வாழ்வதே வாழ்வாம் என்னும் பெருந்தகைமையும் நார் முடிச் சேரலின் நன்மாண்பாக விளங்கின.

அக் காலத்தில், குட்ட நாட்டின் ஒரு பகுதியாகிய இருவலி நாட்டில் உள்ள காப்பியாறு என்ற வூரில், காப்பியன் என்றொரு தமிழ்ச் சான்றோர் வாழ்ந்தார். இப்போது அக் காப்பியாறு மலையாள நாட்டைச் சேர்ந்த கோட்டயம் வட்டத்தில் உள்ளது. கரப்பியன் என்ற பெயருடையார் பலர் நம் நாட்டில் பண்டும் இடைக் காலத்தும் இருந்திருக்கின்றனர். பண்டை நாளில் காப்பியர் பலர் இருந்த திறத்தைத் தொல்காப்பியனார், பல்காப்பியனார் முதலிய சான்றோரது பெயர் எடுத்துக்


  1. பதிற். 32.