பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் 171



காட்டுகிறது. இடைக்காலத்தில் இக் காப்பியர் வழி வந்தோர், தம்மைக் காப்பியக் குடியினர் என்பது வழக்கம். காப்பியக் குடியென்று ஓர் ஊரும் சோழநாட்டுத் தஞ்சை மாவட்டத்தில் குடியென்று ஓர் ஊரும் சோழநாட்டுத் தஞ்சை மாவட்டத்தில் உண்டு. காப்பியந் சேந்தன்[1] என்றும், காப்பியன் ஆதித்தன் கண்டத்தடிகள்[2] என்றும் சிலர் இடைக்காலத்தே இருந்தமை கல்வெட்டுகளால் தெரிகிறது.

காப்பியாற்றுக் காப்பியனார், களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலின் நலங்களை அறிந்து அவன் புகழைப் பாடுவதில் பெருவிருப்பம் கொண்டார். பாடுதற் கேற்ற பண்பும் செயலும் உடைய ஆண்மக்களைப் பாடிப் புகழ் நிறுவுவது தவிரப் பாவன்மைக்குப் பயன் வேறு இல்லாமையால், காப்பியனார் சேரரது வஞ்சி நகர்க்குச் சென்று நார்முடிச் சேரலைக் கண்டார். அவனும் அவரது புலமை நலம் கண்டு, அவரைத் தன் திருவோலக்கத்தில் அரசியற் சுற்றுத்துச் சான்றோராக இருக்குமாறு கொண்டான். அவர், அவ்வப்போது அவன் செயல் நலங்களை இனிமையுறப் பாடினார். அவர் பாடியவற்றுள் அந்தாதித் தொடையாக ஒரு பத்துப் பாட்டுக்களைச் சான்றோர் பதிற்றுப்பத்தில் தொகுத்துக் கோத்துள்ளனர். முதற்பாட்டும் இறுதிப் பாட்டும் அந்தாதித் தொடை பெறாமையால், இப் பாட்டுப் பத்தும், முன்பே அந்தாதியாகப் பாடப்பட்டுக் கிடந்த பல பாட்டுகளிலிருந்து எடுத்துக் கோக்கப் பட்டனவாதல் வேண்டும் என்று கருதலாம்.


  1. S.I.I. Vol. viii.No. 196.
  2. S.I.I.Vol viii No. 660