பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் 181



அவனுடைய நாட்டில் தங்கி அவனது கொடுமிடலை அழிந்தாய்; அவனும் இறந்தொழிந்தான்; அவனது பிழையா விளையுள் நாடு நினக்கு உரியதாயிற்று. அக் காலை, ஒரு பொருளாக மதித்தற்கில்லாத சிலர் நின்னை வைத்தனர். வைத வழியும் நீ சிறிதும் சினம் கொள்ளவில்லை. இஃதன்றோ எனக்கு மிக்க மருட்சியை உண்டு பண்ணிற்று[1]” என்று பாடினார்.

அதுகேட்ட நார்முடிச் சேரல் முறுவலித்து, “சான்றோரே, படைவலியும் துணைவலியும் மெய் வலியும் இழந்த் காலத்து, மனம் அறிவுவழி நில்லாது அலமருதலால், வான்புகழ் பெற்ற மறவரும் நிறையழிந்து பல பேசுவர்; வையா மாலையராகிய பகைவர் வைவதல்லது வேறு செயல்வகை இலராதலின் அதனைப் பொறுத்தல் தானே வலியுடையோர் செயற்லது?” என்றான். வேந்தனது முதுக்குறை நன்மொழியால் காப்பியனார் பெரு மகிழ்ச்சி கொண்டு மேலும் அவனோடு சொல்லாடலுற்றார்.

“வேந்தே, நீ போர்க்குச் செல்லுங்கால் நின் படையது வரவுகண்ட அளவிலேயே பகைவர் பலரும் அஞ்சி ஓடிவிடுகின்றனர்; அத்துணை மென்மை யுடையோர், போர் தொடுப்பதைக் கைவிட்டு நின் அடிபணிந்து அன்பாய் ஒழுகலாமே என்று கருதி அவர் படை நிலைக்குச் சென்று கண்டேன். அவரது படையணி அவர் பெருவலியுடையவர் என்பதை நன்கு காட்டிற்று; வாட்படை மதிலாக, வேற்படை


  1. பதிற். 32.