பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் 185



நல்லரசன் நற்செயல்; அதனைச் செய்யும் நீ உலகிற்குப் பெருநலம் புரியும் தக்கோனாதலால் இவ்வுலகினர் பொருட்டு நீ நீடு வாழ்வாயாக[1]” என வாழ்த்தினர். இவ் வாழ்த்துரை நார்முடிச் சேரலுக்குப் பேருவகை நல்கிற்று.

இது நிற்க, வேனிற் காலத்தில் சேர வேந்தர், நேரிமலைக்குச் சென்று மலைவளம் கண்டு இன்புறுவது போல, ஆற்றிலும் கடலிலும் நீராடி இன்புறுவதும், பண்டை நாளைய தமிழ்ச் செல்வம் வேந்தர் வழக்க மாகும். “யாறுங் குளனும் காவும் ஆடிப் , பதியிகந்து நுகர்தலும் உரிய என்ப[2]” என்பதனால், இது தொல் காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே வரும் வழக்காறு என்பது தெளிவாம். ஆறாடி மகிழும் திறத்தை இப்போதும் கேரள நாட்டார் ஆறாட்டு என வழங்குகின்றனர். மாசித் திங்களில் நிகழும் கடலாட்டு, “மாசிக் கடலாட்டும்[3]” என வழங்கிற்று. நார்முடிச் சேரல், சேர நாட்டில் அரசு புரிந்த காலத்தில் நிகழ்ந்த ஆறாட்டு ஒன்றைக் காப்பியனார் கண்டு வியந்து பாடியுள்ளார்.

ஆறாட்டு நிகழ்தற்குச் சின்னாள் முன்பே, விரதியர் சிலர் உண்ணா நோன்புகொண்டு சேர நாட்டுத் திருமால் கோயிலில் தங்கி நின்றனர்; ஊர்களில் வாழ்வோர் ஆறாடும் திருாளன்று தலைமேற் குவித்த கையராய்த் திருமாலின் திருப்பெயரை ஓதிக்கொண்டு வருகின்றனர்; திருமால் கோயிலிடத்து மணிகள் இடையாறு ஒலித்து ஆரவாரிக்கின்றன. பின்னர்,


  1. பதிற். 37.
  2. தொல். கற். 50.
  3. திருஞானசம்: மட்டிட்ட 6.