பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



17

யும் இலக்கிய அறிவோடு சுற்றி, வரலாற்று உணர்வோடு பண்டை இடங்களைக் கண்டறிந்து வரலாறு எழுதுவதே சிறப்புடையது. இச் சீரிய முறையில், பேராசிரியர். ஒளவை. சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் சேரநாடு முழுமையும் சுற்றித் தொண்டி, வஞ்சி முதலிய வரலாற்றுப் புகழ் படைத்த இடங்களைக் கண்டறிந்தும், மலைகள், ஆறுகள் முதலியவற்றின் பண்டைப் பெயர்கள் இன்னவை, இக் காலப் பெயர்கள் இன்னவை என்பவற்றை ஆராய்ந்து அறிந்தும் இந் நூல் எழுதியிருத்தல் மிகவும் போற்றத்தக்க செயலாகும். இதுவரையில் இருள் படர்ந்திருந்த சங்ககாலச் சேரர் வரலாறு இவ் வரலாற்று நூலால் விளக்கமடையும் என்று கூறுதல் பொருந்தும். இவ்வாசிரியர் ஆழ்ந்து அகன்ற புலமையும் வரலாற்றுத் தெளிவும் ஆராய்ச்சி வன்மையும் உடையவராதலின், இம் முத்திறப் பண்புகளும் இந் நூலை அணி செய்கின்றன. ஆசிரியரது இந்நன்முயற்சியைத் தமிழறிஞர் பாராட்டுவர் என்பது உறுதி.

மா. இராசமாணிக்கம்