பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192 சேர மன்னர் வரலாறு



உண்டுபண்ணிற்று. அவர்கள் கடம்பகுல வேந்தர் எனப்படுவர். அவர்கள் நெடுஞ்சேரலாதனோடு கடற்போர் செய்து கடம்பு மரமாகிய தங்கள் காவல் மரத்தை இழந்து மீளப் போர் தொடுக்கும் பரிசிழந்திருந்தனர். அவன் வானவரம்பனாக இருந்து போய் இமயவரம்பன் என்ற இசை நிறுவிச் சிறந்தது அவர்களுடைய புகழ்க்கும் மானத்துக்கும் மாசு செய்வதாகக் கருதினர். அவன் காலத்தில் மேலைக் கடலில் சேரரும் அவர் நண்பரும் ஒழிய, ஏனோ எவரும் கலம் செலுத்துதல் இயலாது என்னும் பேரிசை நாடெங்கும் பரவியிருந்தது. அதனால் அவ் வட வேந்தர்கள் கடல் வழியாகப் போர் தொடுப்பதை விடுத்து நிலத்து வழியாக ஒரு பெரும்படை திரட்டி வரக் கருதினர். செங்குட்டுவன் குடநாட்டினின்றும் நீங்கிக் குட்டநாட்டில் அரசு வீற்றிருப்பது கண்டு குடநாட்டின் வட பகுதியில் நுழைந்து போர் தொடுத்தனர். தொடக்கத்தில் குடவர் படை வடவர் படைமுன் நிற்கலாற்றது பின்வாங்கியது. பின்பு, குட்டுவர் படை போந்து இடுப்பில் என்னுடமிடத்தே தங்கி வடவர் படையை வெருட்டவே, இரண்டும் வயலூர் என்னு மிடத்தே கடும்போர் புரிந்தன. வடவர் படை அழிந்தது; அவரது முழுமுதல் அரணம் தவிடுபொடியாயிற்று. உய்ந்தோடிய வடவர் சிலர் கொடுகூர் என்னுமிடத் திருந்த அரண்களில் ஒளித்தனர். சேரர் அதனை யுணர்ந்து இடையிலோடிய ஆற்றைக் கடந்து கொடுகூரை அடைந்து அரணையழித்து வடவர்