பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் 193



படையைத் தகர்த்தனர். இந்த வயலூர் இப்போது பெயிலூர் என வட கன்னட நாட்டில் உளது. இடும்பில் என்பது இப்போது உடுப்பியென வழங்குகிறது. கொடுகூர் கோட்கூரு என மருவியுளது.

இவ்வாறு, தமது சேர நாட்டுப் படையெடுப்பு (வஞ்சிப்போர்) வெற்றி பயவாமை கண்ட வடவேந்தர் வேறு செயல்வகை அறியாது திகைத்து நின்றனர். மேலை நிலத்து யவனர்கள், சேரர் ஆதரவால் அச்சமின்றிப் பொன் சுமந்து கலங்களுடன் போந்து மிளகும் சந்தனமும் அகிலும் பிற விரைப் பொருளும் கொண்டு சென்று பெரு வாணிகம் செய்து பெருஞ்செல்வராயினர். அந்த யவன நாட்டுப் பொருணூலறிஞர் முற்போந்து யவன நாட்டவர் தம்மை உயர்ந்த பட்டாடையாலும் விரைப் பொருளாலும் ஒப்பனை செய்து கொள்வதில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பொன்னைச் செலவிடுவது கூடாது என்றெல்லாம் தங்கள் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினர். அதனைச் செவிமடுத்த சில யவனர்க்கட்குச் சேர வேந்தர் பால் வெறுப்பும் மன வெரிச்சலும் உண்டாயின. அக் குறிப்பை அறிந்த வட வேந்தர், அவர்களோடு உறவு செய்துகொண்டு சேரரைச் சீரழித்தற்குச் சூழ்ச்சி செய்தனர். நிலத்து வழியே சென்று பொருதால் சேரரை வெல்ல முடியாதென்பதை வியலூர் போர் காட்டி விட்டதனால், கடல் வழியாகப் படை கொண்டு சென்று சேரரைத் தாக்க முயன்றனர். யவனர் சிலர் அவர்கட்கு உதவி செய்தனர்.