பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194 சேர மன்னர் வரலாறு



வஞ்சிநகர்க்கண் அரசு வீற்றிருந்த செங்குட்டுவன். யவனரும் வடவரும் கூடிப் பெரியதொரு கடற்படை கொண்டு போர்க்கு வரும் செய்தியை ஒற்றரால் அறிந்தான். உடனே வில்லவன்கோதை அழும்பில்வேள் முதலிய அமைச்சர்களை வருவித்து நால்வகைப் படையும் திரட்டுமாறு ஆணையிட்டான். படைகள் பலவும் திரண்டன.

கடற்போர் செய்தற்குத் தேரும் களிறும் குதிரையும் பயன்படாமையின் அவற்றைக் கடற்கரையையும் ஏனை எல்லைப் புறங்களையும் காவல் செய்யுமாறு பணித்து, விற்படையும் வேற்படையும் வாட்படையும் கொண்ட பெரும்படையை கலங்களில் செல்லப் பணித்தான்.

சேரநாட்டுக்கு அண்மையிலன்றித் தென்பாண்டிக் கரை வழியாகப் பகைவர் நிலத்திற் புகுந்து போர் தொடுக்கக் கூடும் என்று எண்ணி, தென் பாண்டிப் பகுதியில் இருந்து அரசுபுரிந்த அறுகையென்னும் குறுநிலத் தலைவனைப் பாண்டிக் கடற்கரையைக் காக்குமாறு திருமுகம் விடுத்தான். அறுகையும் செங்குட்டுவன் கருத்துணர்ந்து அவ்வாறே படை திரட்டிக் காவல் புரியலுற்றான். செங்குட்டுவனுடைய தேர் முதலிய மூன்று படைகளும் சேரநாடு முழுதும் பரந்து அருங்காவல் புரிந்தன. இச் செயலை அறிந்த பரணர் என்னும் நல்லிசைச் சான்றோர்,

“மன்பதை மருள் அரசுபடக் கடந்து
முந்துவினை எதிர்வரப் பெறுதல் காணியர்,
ஒளிறுநிலை உயர்மருப் பேந்திய களிறூர்ந்து