பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் 197



வெல்புகழ்க் குட்டுவற் கண்டோர்
செல்குவம் என்னார் பாடுபு பெயர்ந்தே[1]

என்று பாடிச் செங்குட்டுவன் சீர்த்தியைச் செந்தமிழில் நிலைபெறுவித்தார். செங்குட்டுவனது வரையாத வள்ளன்மையால், பாட்டினும் கூத்தினும், வல்லுநர் மாட்டாதவர் என்ற வேறுபாடின்றி, யாவரும் பெரும்பொருள் பெறுவதை. அவருள் இளையர் பலர் கண்டு, தமக்குள்ளே, “இச் செங்குட்டுவன் கல்லா வாய்மையன்” என்று பேசிக்கொண்டனர். இதனைக் கேட்ட பரணர், செங்குட்டுவனைப் பாடிய பாட் டொன்றில்,

“பைம்பொன் தாமரை பாணர்ச் சூட்டி,
ஒண்ணுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டிக்,
கெடலரும் பல்புகழ் நிலைஇ நீர்புக்குக்
கடலொடு உழந்த பனித்துறைப் பரதவ !
‘ஆண்டு நீர்ப் பெற்ற தாரம் ஈண்டு இவர்
கொள்ளாப் பாடற்கு எளிதினின் ஈயும்
கல்லா வாய்மையன் இவன் எனத் தத்தம்
கைவல் இளையர்[2]

கூறுகின்றனர் எனக் குறித்து அவனது கொடைமடத்தை எடுத்தோதிச் சிறப்பித்தார்.

செந்தமிழ் வளஞ் சிறந்து திகழும் பரணருடைய நல்லிசைப் புலமையின் பால் செங்குட்டுவனுக்கு மிக்க விருப்பமுண்டாயிற்று. அவரைக் கொண்டு தமிழ் இளைஞர்க்கு அகமும் பொருளுமாகிய பொருணூல்


  1. பதிற். 2.
  2. பதிற். 48.