பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206 சேர மன்னர் வரலாறு



வேளாவிக்கோ மாளிகையில் (வேண்மாடத்தில் அரசர்க்குரிய சிறப்புடன் இருத்திக் கண்ணகி விழாவில் கலந்து கொள்ளச் செய்தான். ஈழ நாட்டிலிருந்து வந்த வேந்தன் முதற் கயவாகு எனப்படுகின்றான். பின்பு செங்குட்டுவன்,

“கைவினை முற்றிய தெய்வப் படிமத்து
வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து
முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டிப்
பூப்பலி செய்து காப்புக்கடை நிறுத்தி
வேள்வியும் விழாவும் நாடொறும் வகுத்துக்
கடவுண் மங்கலம் செய்கென ஏவினன்.[1]

பிறகு வேந்தர் அனைவரும் தங்கள் தங்கள் நாட்டிலும், தங்களாற் செய்யப்படும் திருக்கோயிலில் எழுந்தருள் வேண்டும் என்று கண்ணகித் தெய்வத்தைப் பரவினர். கண்ணகித் தெய்வமும் “தந்தேன் வரம்” என்று மொழிந்தது.

இது செய்த காலத்துச் செங்குட்டுவன் ஐம்பதாண்டு நிரம்பியிருந்தான். மேலும், ஐந்தாண்டுகள் தன் வாழ்நாளைச் செங்குட்டுவன் அறத்துறை வேள்விகள் செய்து கழித்து மகிழ்ந்தான். பதிற்றுப்பத்து ஐந்தாம் பதிகம், செங்குட்டுவன் ஐம்பத்தையாண்டு வீற்றிருந்தான் என்று கூறுகிறது. கண்ணகி வரலாற்றை நேரிற் கூறிச் செங்குட்டுவன் கருத்தைப் புகழ்க்குரிய துறையில் செலுத்திய சாத்தனாரது சிறப்பை வியந்து, அவர் பெயரால் “மாசாத்தனூர்” என்ற ஊரோடு, இந்


  1. சிலப் 28: 288-33.