பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருச்சிற்றம்பலம்.


சேர மன்னர் வரலாறு


1. சேர நாடு

நீலத் திரைக்கட லோரத்திலே நின்று

நித்தம் தவஞ்செய் குமரியெல்லை-வட

மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்

மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு- பாரதியார்

பண்டை நாளைத் தமிழகம், “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்” என்று தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்த பனம்பாரனார் என்பவராற் சிறப்பித்துக் கூறப்படுவது. வடவேங்கட மலைத்தொடர் வடக்கே வட பெண்ணை யாற்றங்கரை வரையில் தொடர்ந்து தமிழகத்துக்கு வடவெல்லையாய் நிற்பது. தென்குமரி யென்பது தென்கோடியிலுள்ள குமரிமலையாகிய தென்னெல்லை. கிழக்கிலும் மேற்கிலும் கடலாதலால் அவை குறிக்கப்படவில்லை.

பண்டை நாளில் இத் தமிழகம் சேர சோழ பாண்டியரென்ற மூவேந்தருக்கு உரியதாய், முறையே, சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என மூன்று பெரும் பிரிவுற்று விளங்கிற்று. பண்டைத் தமிழாசிரியன்மாரும் “பொதுமை சுட்டிய மூவருலகம்[1]” என்றும், “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு[2]” என்றும் கூறியுள்ளனர்.


  1. புறம். 357
  2. தொல். செய். 78