பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208 சேர மன்னர் வரலாறு



பாட்டுச் சேரலாதன் என்ற சிறப்புப் பெயர் உண்டாயிற்று. “தண்டாரணியத்துக் கோட்பட்ட வருடையைத் தொண்டியுள் தந்து” என்று பதிகம்[1] கூறுவதால், இவன் தொடக்கத்தில் தொண்டி நகரைத் தலைநகரமாகக் கொண்ட பொறைநாட்டல் இருந்து வந்தான் என்பது தெரிகிறது. செங்குட்டுவனுக்குப்பின் வஞ்சி நகரை அடைந்து சேரநாடு முழுதிற்கும் இச் சேரலாதன் முடி வேந்தனானான்.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் அரசு கட்டி லேறியதும், சேரநாட்டின் வட பகுதியில் வாழ்ந்த சதகன்னர், வானவாற்றையும் வானமலையையும் வரம்பறுத்துத் தம்மை வானவரம்பர் எனச் சேரர் கூறிக்கொள்வது பற்றி அழுக்காறு கொண்டு அதற்குத் தெற்கிலும் தமது எல்லைப் பரப்ப முயன்றனர். அவரது வானவாசி நாட்டுக்குத் தெற்கில், சேர நாட்டின் வடபகுதியாக இருந்த கொண்கான நாட்டை ஆண்டுவந்த “நன்னன் உதியன்[2]” என்பான், சேரர் கீழ்க் குறுநிலத் தலைவனாய் இருந்துவந்தமையின், அது குட நாட்டைச் சேர்ந்த பகுதியாயினும் தனியாக வைத்துப் பேசப்பட்டு வந்தது. அதன் தென் பகுதியே குடநாடு எனப் பெயர் வழங்கிற்று. நார்முடிச் சேரலால் கொங்கு நாட்டில் நன்னன் வலியழிந்து போகவே, அவன் வழிவந்தோர் சதகன்னர்களுக்கு அஞ்சி அவர்வழி நிற்கலாயினர். இரு திறத்தாரும் தம்மிற் கூடிக் குடநாட்டுட் புகுந்து குறும்பு செய்தனர். அச் செய்தி


  1. பதிற். vi. பதிகம். வருடை-வரையாடு.
  2. அகம் 258.