பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210 சேர மன்னர் வரலாறு



முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெண்சோறு எழுகலத்து ஏந்தினும் சிறிது என் தோழி பெருந்தோள் நெகிழ்ந்த செல்லற்கு விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே[1]

என்று பாடினர். இப் பாட்டின் இனிமையையும், நள்ளியினுடைய கானகத்தின் இயல்பையும், தொண்டி நகரின் நெல் வளத்தையும் உள்ளவாறு தீட்டப் பெற்றிருக்கும் ஒட்பத்தையும் கண்ட சான்றோர், அவர்க்குக் காக்கை பாடினி என்ற சிறப்பை நல்கினர். அதுமுதல் அவர் காக்கை பாடினியார் நச் செள்ளையார் என்று விளங்குவாராயினர். அதனை யறிந்த வேந்தன், அவர் இருந்த ஊரைக் காக்கையூர் என்று பெயரிட்டு அவர்க்கு இறையிலி முற்றூட்டாக வழங்கினான். அவர் தனது காக்கையூலிருந்து வந்தார். அது பாலைக்காட்டுப் பகுதியில் உள்ளது.

சேர நாடின் வடக்கில் வடவர் செய்யும் குறும்பும், அவர்களை ஒடுக்குதற்குச் சேரலாதன் படை கொண்டு செல்லும் மேற்செலவும் அவருக்குத் தெரிந்தன. சேர வேந்தர், மகளிர் பாடும் இசையிலும், ஆடும் கூத்திலும் பேரீடுபாடு உடையவர், செங்குட்டுவன் வடநாடு சென்ற போது பாடல் மகளிரும் ஆடல் மகளிரும் உடன் சென்ற திறம் இதற்குப் போதிய சான்றாகும். ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், ஆண்டில் இளையனாதலால் இன்பத்துறையில் மிக்க எளியனா யிருந்தது யாவர்க்கும் தெரிந்திருந்தது. சேரலாதன்


  1. குறுந். 210.