பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் 211



போர்ச் செலவை மேற்கொண்டபோது மகளிர் கூட்டம் ஒன்றும் உடன் சென்றது. இந்த எளிமை வேந்தரது கொற்றத்தைச் சிதைக்கும் என்று காக்கை பாடினார் கண்டு தமது நெஞ்சில் அஞ்சிக்கொண்டே இருந்தார்.

ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் குடபுலம் செல்பவன், ஒருநாள் மாலையில், நுண்மணல் பரந்த பனம்பொழில் ஒன்றில் பந்தல் அமைத்து, ஏனை வேந்தரும் தலைவரும் கூடியிருப்ப விறலியரது பாட்டிசையில் இன்புறலானான். இதனை காக்கை பாடினார் அறிந்து, விரைந்து போந்து வேந்தனைக் கண்டு, “வேந்தே நீ இவ் வண்ணம் விறலியர் பாட்டிசையில் வீழ்ந்து கிடந்தால், நின் மனத் திண்மை உணராத பிறர் ‘இவ் வேந்தன் மெல்லியன் போலும்’ என எண்ணி இகழ்வரே!” என்ற கருத்துப்பட,

"சுடர் நுதல் மடநோக்கின்
வாள் நகை இலங்கெயிற்று
அமிழ்துபொதி துவர்வாய் அசைநடை விறலியர்
பாடல் சான்று நீடினை உறைதலின்,
வெள்வேல் அண்ணல் மெல்லியன் போன்மென
உள்ளுவர் கொல்லோநின் உணரா தோரே[1]

என இதனைக் கேட்கும் வேந்தன் உள்ளம் சினம் கொள்ளா வகையில், மிக்க நயமாக விளம்பினார். அதுகேட்டு வேந்தன் மறுவலித்துத் தன் செய்கையின் விளைவைச் சிந்திக்கலானான். உடனே காக்கை பாடினியார், நின்னை நன்கு உணர்ந்தோர், “நீ பெருஞ்


  1. பதிற். 51.