பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212 சேர மன்னர் வரலாறு



சினப்புயலேறு அனையை” என்றும், நின் படைவழி வாழ்நர் “தடக்கையானைத் தோடிக்கோடு துமிக்கும் எஃகுடை வலத்தர்” என்றும், போர்க்களத்தின்கண்,

“மாற்றருஞ் சீற்றத்து மாயிருங் கூற்றம்
வலை விரித்தன்ன நோக்கலை
கடியையால், நெடுந்தகை![1]

என்றும் உணர்ந்து அமைவர் என்று இனிது மொழிந்து அவனைக் குடபுலப் போர்க்குச் செல்லுமாறு ஊக்கினார்.

குடபுலம் சென்ற சேரலானது பெரும்படையின் வரவு கண்டதும், கொண்கான நாட்டு வேந்தரான நன்னன் வழியினருட் சிலர், மலைபடு பொருளும் காடுபடு பொருளும் கடல்படு பொருளுமாகியவற்றுள் மிகச் சிறந்தவற்றைத் திறையாகத் தந்து பணிந்தனர். சேரலாதன் அவரது திறை பெற்றும் சினந் தணியானாக, அவர் பொருட்குக் காக்கை பாடினியார் வேந்தன் முன் நின்று,

“செல்வர் செல்வம் சேர்ந்தோர்க்கு அரணம்,
அறியாது எதிர்ந்து துப்பிற் குறையுற்றுப்
பணிந்து திறை தருப நின் பகைவ ராயின்,
சினம்செலத் தணிமோ, வாழ்கநின் கண்ணி[2]

என்றும், “சினந் தணியாது போர் செய்து நாட்டை அழிப்பது கூடாது; இதுவும் நினது நாடே; பாடுசால் நன்கலம் தரூஉம் நாடு புறந்தருதல் நினக்குமார் கடனே” என்றும் எடுத்தோதினர்.


  1. பதிற். 51.
  2. பதிற். 59.