பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/218

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216 சேர மன்னர் வரலாறுஅறிந்த தானைத் தலைவர்கள், “அதற்குள் நுழைந்து செல்வதே தக்கது; அன்றேல், அதனைச் சுற்றி பெருந்தூரம் வளைந்து வளைந்து சேறல் வேண்டும்” என்றனர்; வேந்தனும் அவர் உரைக்கு இசையும் குறிப்புடையனானான் அப்போது காக்கை பாடினியார் குறுக்கிட்டு, “வேந்தே, செல்லும் வழியில் இருப்பது தொல்புகழ் மூதூர்; அதன்கண் எந்திரம் புணர்த்த கோட்டை வாயிலும், முதலைகள் வாழும் ஆழ்ந்த அகழியும், வானுற ஓங்கிய மதிலும் உள்ளன; அது நின்னாற் காக்கப்படுவதொன்று; அன்றியும், அதற்கு, நின் முன்னோர், தமக்கு முன்னும் பின்னும் வந்தோர் ஓம்புமாறு வேண்டுவன செய்துள்ளனர்; அதனால் அதன்கண் புகுந்து செல்லாது வேறு வழியே செல்வாயாக; நேரே செல்வாயேல், நின் படையிலுள்ள போர் யானைகள், ஏந்துகை சுருட்டித் தோட்டி நீவி மேம்படு வெல் கொடி நுடங்கத் தாங்கலாகா[1]” என்று தெருட்டினர். வேந்தனும் அவ்வாறே செய்து சிறப்புற்றான்.

நாட்டின் வருவாயைப் பெருக்கி, வந்ததனை அறம் பொருள் இன்பங்கட்குப் பகுத்துச் செவ்விய முறையில் ஆட்சி புரியும் சேரலாதன், இன்மையுற்று வருந்தும் இரவலர்க்கு வேண்டுவனவற்றை நிரம்ப நல்கி இனிது வாழச் செய்யும் இயல்புடையவன். பனியும் குளிரும் நின்று வருந்தும் மாசித் திங்களில் விடியற்காலத்தே செல்லும் பாணனுக்குக் காலையில் ஞாயிற்றின் எழுச்சியும் விளக்கமும் இன்பம் தருவது போல,


  1. பதிற். 50.