பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் 217



இரவலருடைய சிறுகுடி பெருகப் பேருதவி செய்தான்[1]. காதலால் தமது உள்ளத்தைக் கவர்ந்து நிற்கும் மகளிர் துனித்து நோக்கும் பார்வை காதலர்க்கு மிக்க வருத் தத்தைச் செய்யும்; அதனை நீக்குதற்கு எச்செயலையும் அவர்கள் தட்டின்றிச் செய்வர் என்பது உலகியல் உண்மை. சேரலாதனோ எனின், காதலி காட்டும் துனித்த பார்வையினும் இரவலருடைய இன்மை நோக்கத்தைக் கண்டால் அஞ்சி நடுங்கி அதனை முற்பட்டு நீக்குவன்[2]. இதனால் சேரலாதன் நாட்டில், இரப்பவரே இலராயினர்; வேறு நாடுகளில் அவர்கள் இருப்பது ஒரு நாள் இவ்வேந்தனுக்குத் தெரிந்தது. உடனே அவன் அரசியற் சுற்றத்தாரை விடுத்து அந்த நாடுகட்குச் சென்று அவர்களைக் கொணருமாறு பணித்தான். அவர்கள் வந்தபோது அவர்கட்கு வேண்டுவன நல்கி இன்சொல்லும் நல்லுணவும் தந்து போக்கினான். இதனை, “வாராயினும் இரவலர் வேண்டித் தேரில் தந்து அவர்க்கு ஆர்பதன் நல்கும் இசைசால் தோன்றல்[3]” என்று நச்செள்ளையார் நாம் அறியப் பாடிக் காட்டுகின்றார்.

பொறை நாட்டின் வடபகுதியில் நறவு என்னும் ஒரு பேரூர் இருந்தது. அதனைத் தாலமி (Ptolemy) நறவூர் (Nouroura) என்று குறித்திருக்கின்றார்.[4] ஆங்குள்ள அரண்மனையில் ஒருகால் சேரலாதன் சென்று


  1. பதிற். 59.
  2. ஷை. 3.
  3. ஷை. 55.
  4. பெரிப்புளுஸ் ஆசிரியர் நவுறா (Naoura) என்பதும் பிளினி நித்திரியா (Nitria) என்பதும் இந்நறவூரையே; கர்னல்யூல் முதலியோர் நேத்தராவதியாற்றங் கரையிலுள்ள மங்களூர் என்று கருதுகின்றனர். ஆனால், நறவூர் என்ற பெயரையேயுடைய ஊரொன்று அப்பகுதியில் உளது.