பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் 219



பல எடுத்துரைத்தான். உரைக்குந்தோறும் அவட்கு ஊடல் மிகுந்ததேயன்றிக் குறையவில்லை. அவ் வூடல் முதிர்ந்து துனியைப் பயக்கும் எல்லையை நெருங்குதலும், கண் கலுழக், காலில் அணிந்த கிண்கிணி ஒலிப்ப, உடல் நடுங்க , நேர் நின்று, வாயிதழ் துடிப்பது, கையில் இருந்த செங்குவளைப் பூவைச் சேரலாதன் மேல் எறிதற்கு ஓங்கினாள். அப் பூ, தன்மேற் பட்டு வாடுதல் ஆகாது என்ற அருளுள்ளத்தாலும், அவள் கையகத்தில் இருந்து தன் கையை அடைதல் தகுமே யன்றி நிலத்து வீழ்வது கூடாது என்ற காதலுணர்வாலும், இருகையையும் ஏந்தி என் கையகத்து ஈக’ என இரந்து நின்றான். அவள், அதற்கு உடன்படாது, “நீ எமக்கு யாரையோ'’ என்று அவ்விடம் விட்டுப் பெயர்ந்தாள். பின்னர், காக்கை பாடினியார் சென்று அரசமாதேவி ஊடல் உணரத் தகுவன கூறி வேந்தன் அடியில் வீழ்ந்து பணியச் செய்தார்.

பின் பொருகால், காக்கைபாடினியார் இந் நிகழ்ச்சியை ஒரு பாட்டிடை வைத்துப் பாடி,[1] நின் காதலி எறிதற்கு ஓச்சிய சிறு செங்குவளையை அவளைப் பற்றிக் கைக் கொள்ளமாட்டாயாகிய நீ, பகைவருடைய வான்தோயும் எயில்களை எங்ஙனம் கைக்கொள்ள வல்லவனையினை? என்று இனிமையுற இசைத்தார்.

ஒருகால், சேரலாதன் பொருது வென்ற போர்க் களம் ஒன்றில், அவன் வலியறியாது பகைவர் போந்து பொருது மடிந்தனர். அவர்கள் துறக்க வாழ்வு பெறுவது


  1. பதிற். 52.