பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் 221



வாழ்த்துங்கால், “எனையதூஉம் உயர்நிலை யுலகத்துச் செல்லாதுஇவண் நின்று, இருநில மருங்கில் நெடிது மன்னியரோ[1]” என்று வாழ்த்துவர், வள்ளியோர்க்கு மழை முகிலை உவமம் கூறுவது மரபு. அம் மழைமுகில் மழையைப் பெய்தபின் வெளுத்துப் பஞ்சுத்துய்போலப் பரந்து கெடும்; அதனைக் கண்ட காக்கை பாடினியார், சேரலாதன் கொடையில் மழைமுகிலை யொப்பன்; ஆனால் அவனது வாணாள் அதுபோல் கெடலாகாது என வாழ்த்துவாராய், “பெய்து புறந்தந்து பொங்கலாம், விண்டுச் சேர்ந்த வெண்மழை போலச் சென்று அறாலியரோ பெரும் ... ஓங்கல் உள்ளத்துக் குரிசில், நின் நாளே[2]” என்று கூறுவர்.

இவர்க்கு வேண்டும் சிறப்புகளைச் செய்த சேரலாதன் தன் திருவோலகத்துச் சான்றோருள் ஒருவராய்த் தன் பக்கத்துக்கொண்டான் எனப் பதிகம் கூறிற்றாக, அதனை உணராத சிலர், இவரை. அவன் மணந்து கொண்டான் என்று சிறிதும் நாகூசாது கூறியிருக்கின்றனர். அரசன் பக்கத்திருப்ப தென்பது அமைச்சராதல் எனத் திருக்குறள் படித்த இளஞ் சிறுவரும் அறிவர். இச் சிறு பொருளால் விளையும் பெரும்பழியை நினைக்கும் திறமில்லாதார் பலர், தமிழ்நாட்டு வரலாறு எழுதுகின்றோமெனத் துணிந்து கழுவாயில்லாத வழுக்களைத் தமிழர் வாழ்வில் புகுத்தியிருப்பதைத் தமிழறிஞர் இனியும் நோக்காமல் இருப்பது பெரிதும் வருந்தத்தக்கது.


  1. பதிற். 54.
  2. பதிற். 55.