பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224 சேர மன்னர் வரலாறு



விடத்தில் நின்றன. நாட்டில் எவ்வகை அச்சமும் மக்கட்கு ஏற்படவில்லை; எல்லோரும் இன்பமாக வாழ்ந்தனர். மாந்தரன் தனக்குரிய கல்வி முற்றும் குறைவறக் கற்று உயர்ந்தான். பகைவர் வலியைக் கடந்த வாள் வேந்தர் பலர், அவனுக்கு அடங்கி, அருங்கலங் களையும் களிறுகளையும் திறையாகத் தந்து அவன் ஆணைவழி நின்றனர். நடுநிலை திறம்பாத செங் கோன்மையால் அவன் கெடாத புகழ் பெற்று விளங்கினான். அவனது புகழ் விசும்பு முற்றும் பரந்திருந்தது. அவனுடைய வாளாற்றலைப் பகைவர் நன்கு தெரிந்தனர். அவனை அறக்கடவுள் துணையாய் நின்று வாழ்த்தியது. அதனால், அவனை “அறன் வாழ்த்த நன்கு ஆண்ட விறல் மாந்தரன்[1]” என்று சான்றோர் பரவினர்.

மாந்தரம் பொறையன் கடுங்கோவின் அரசியற் செயல்கள், இவற்றின் வேறாக நூல்களில் ஒன்றும் காணப்படவில். அதற்குப்பின், ஒள்வாள் கோப்பெருஞ் சேரல் இரும்பொறை என்பான் சேரமானாய் விளக்க முற்றான். களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் முதலியோர் காலத்தில் கொங்கு நாட்டில் வடக்கே பூவானி யாறு வரையும், கிழக்கே கொங்கு வஞ்சி (தாராபுரம்) வரையும் பரவியிருந்த பொறை நாட்டைக் கீழ்க் கொங்கு நாட்டுக் கருவூர் வரையில் பரப்பிய முதற் சேரமான் இந்த ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையாவன்.


  1. பதிற். 90.